

இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்துக் காலத்தால் அழியாத காவியமாகத் திகழும் 'திருவிளையாடல்' திரைப்படம், 60 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு நேற்று முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள சத்யம், தேவி, காசினோ உள்ளிட்ட முக்கிய திரையரங்குகள் உட்படத் தமிழகம் முழுவதும் சுமார் 150 திரையரங்குகளில் 'திருவிளையாடல்' திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் அபிமான நடிகரின் காவியத்தைத் திரையில் காணச் சிவாஜி ரசிர்கள் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு 'திருவிளையாடல்' வெளியாவதைத் திருவிழா போலக் கொண்டாடும் வகையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்க வளாகத்தில் சிவாஜி ரசிகர்கள் பிரம்மாண்டமாகக் கைலாய மலை செட்டை வடிவமைத்துள்ளனர்.
அந்தக் கைலாயத்தின் நடுவே, படத்தில் சிவபெருமானாக நடித்த சிவாஜி கணேசன் கம்பீரமாக அமர்ந்திருப்பது போன்ற பிரம்மாண்ட கட்-அவுட் மற்றும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இந்தக் காட்சி வெகுவாகக் கவர்ந்து, செல்ஃபி எடுக்கும் இடமாக மாறியுள்ளது.
இதுமட்டுமின்றி, இந்தத் திரைப்படம் திரையிடப்படும் நாட்களில் தினமும் மாலை வேளைகளில், கைலாய செட்டில் சிவபெருமான் தோற்றத்தில் வீற்றிருக்கும் சிவாஜி கணேசனுக்கு ரசிகர்கள் சார்பில் சிறப்புத் தீபாராதனை காட்டப்பட்டு, திரையரங்கிற்கு வரும் அனைவருக்கும் பிரசாதமும் வழங்கப்பட்டு வருகிறது.
பழைய திரைப்படங்களின் மறுவெளியீட்டு வரிசையில், ரசிகர்களின் இந்தப் பக்தி கலந்த கொண்டாட்டம் தமிழ் சினிமா வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.