

நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல் மற்றும் அரசியல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட யோகி பாபுவின் 'சிங்காரம்' திரைப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை இணைத்து பேசுகிறது. வருகிற 30-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது.
இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் உருவாக்க அனுபவங்களையும், அதன் பின்னணியையும் பகிர்ந்துகொண்டனர்.
இயக்குநர் கே.வி. கதிர்வேலு பேசுகையில், நரிக்குறவர் சமூகத்தினரின் வரலாறு மற்றும் பின்னணியை அறிந்துகொள்வதற்காக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அதிகாரம் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற பிரச்சனைகளையும் இப்படம் பேசுவதாகக் குறிப்பிட்டார். நரிக்குறவர் சமூகத்தின் வரலாற்றுடன் அரசியல் சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், சமூகக் கருத்துகளுடன் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய படமாக ‘சிங்காரம்’ உருவாகியுள்ளதாகவும் கூறி, அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நடிகர் யோகி பாபு பேசுகையில், இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு, ரமண பாலாஜி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்த அவர், மனோபாலா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் என்று குறிப்பிட்டார். தன்னை நம்பி வாய்ப்பளித்த படக்குழுவினரின் ஊக்கமும் நம்பிக்கையும் முக்கியமானவை என்று தெரிவித்ததுடன், வரும் 30-ந்தேதி வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
யோகி பாபு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ். பாஸ்கர், மரியா வின்சென்ட், சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்., தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன், கே.எம். கணேஷ்கர் மற்றும் பலர்.
தயாரிப்பு நிறுவனம்- ராக் புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர்கள் - ஏ.எஸ். ரமண பாலாஜி, பத்மாவதி காந்தி
எழுத்து மற்றும் இயக்கம்- கே.வி. கதிர்வேலு
இசை- சாம் சி.எஸ்.
பாடல்கள்- விவேகா
ஒளிப்பதிவு - பிரசன்னா எஸ். குமார்
படத்தொகுப்பு - லாரன்ஸ் கிஷோர்
கலை இயக்கம்- குருராஜ்
சண்டைப் பயிற்சி- ஃபேன்டம் பிரதீப்