

திரைப்பட ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'அய்யய்யோ அம்மாடி' இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலை சமூக வலைத்தளங்களில் வெளியிடவுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'சிக்மா'. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சுபாஸ்கரன் வழங்கும் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக சுந்தீப் கிஷனும், கதாநாயகியாக ஃபரியா அப்துல்லாவும் நடித்துள்ளனர். மேலும் சம்பத் ராஜ், சிவ பண்டிட், ராஜு சுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே வெளியான 'சிக்மா ஸ்டைல்' எனும் முதல் பாடலும், படத்தின் டீசரும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலானது. அந்த வரிசையில் தற்போது வெளியாகவுள்ள 'அய்யய்யோ அம்மாடி' பாடல் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதிரடி மற்றும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, தற்போது இறுதிப் பிந்தைய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா மூலமாக இந்த பாடல் வெளியாவது இசைப் பிரியர்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.