

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், முன்னணி நடிகை, பாடகி எனப் பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவருமான ஸ்ருதி ஹாசன், தனது திரையுலகப் பயணம், பெற்றோரின் கண்டிப்பு, சமூக வலைத்தளங்களின் தாக்கம் மற்றும் தனது தந்தையின் அரசியல் பயணம் குறித்துப் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தனது ஆரம்பகாலத் திரைப்பயணம் குறித்துப் பேசிய ஸ்ருதி ஹாசன், "நான் ஆரம்பத்தில் கேமராவுக்குப் பின்னால் பணியாற்றவும், கதைகள் எழுதவும் தான் விரும்பினேன்.
என் தாயாருடன் ஆடை வடிவமைப்புத் துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான், தந்தை கமல்ஹாசனின் 'ஹேராம்' (Hey Ram) திரைப்படத்தில் நடிக்கும் முதல் வாய்ப்பு தற்செயலாகக் கிடைத்தது. அந்தப் படத்தின் முதல் காட்சிக்கான உடையை நானே தான் வடிவமைத்துக் கொண்டேன்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "என் பெற்றோர் இருவரும் மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. திரையில் முதன்முதலில் என்னை நானே பார்த்தபோது எனக்குப் பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை.
ஆனால், எனக்கு இவ்வளவு அங்கீகாரத்தைக் கொடுத்த இந்தத் துறைக்கும், என் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எதையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்படித் தான் எனது இரண்டாவது திரைப்படத்துடன் என் உண்மையான திரையுலகப் பயணம் தொடங்கியது," என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
70 மற்றும் 80-களில் இருந்த நடிகர்கள் தற்போதைய தலைமுறையை விட மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகக் குறிப்பிட்ட ஸ்ருதி ஹாசன், மலையாளத் திரை உலகம் மீதான தனது காதலையும் வெளிப்படுத்தினார்.
"கேரளாவுக்கு வருவது எனக்கு எப்போதுமே ஒரு பெரிய அரண்மனைக்குள் நுழைவது போன்ற மகிழ்ச்சியைத் தரும். நான் மலையாள சினிமாவின் தீவிர ரசிகை.
ஒரு திரைப்படத்தைப் பிரம்மாண்டமாகவோ அல்லது பான்-இந்தியா அளவில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உழைப்பதை விட, கதையின் முக்கியத் தருணங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துப் படம் எடுக்கும் மலையாளத் திரைத்துறையின் போக்கை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
அங்கு எனக்குச் சரியான வாய்ப்பு வரும்போது நிச்சயமாக மலையாளப் படத்தில் நடிப்பேன்," என்றார்.
சமூக வலைத்தளங்கள் குறித்துத் தனது விமர்சனத்தை முன்வைத்த அவர், "இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள் என்பவை திரைத்துறையினருக்கு மட்டுமல்லாமல், சாமானிய மக்கள் அனைவருக்கும் கூட அவர்களின் தனிப்பட்ட சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு ஒரு மிகப்பெரிய தடையாக உருவெடுத்து வருகின்றன," என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.
மேலும், தான் திட்டமிட்டுப் பன்முகக் கலைஞராக மாறவில்லை என்றும், எல்லாமே காலப்போக்கில் தானாகவே அமைந்தது என்றும் கூறினார்.
கமல்ஹாசனின் அரசியல் நுழைவு மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஸ்ருதி ஹாசன் மிகவும் முதிர்ச்சியுடன் பதிலளித்தார்.
"அப்பாவின் அரசியல் பயணம் குறித்து வெளியாட்கள் போலக் கருத்துச் சொல்லும் அளவிற்கு என்னிடம் அரசியல் ரீதியாகப் போதுமான விபரங்களோ அல்லது பொதுஅறிவுத் தகவல்களோ இல்லை.
ஆனால், அப்பாவின் மீது எனக்குள்ள அளவுகடந்த அன்பின் காரணமாகவும், ஒரு மகளாக என்னால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும், அவரது அரசியல் கட்சிக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன்," என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார்.