

போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் சமூக பொறுப்புகளை மையமாகக் கொண்ட 'செய் செய்யாதே' திரைப்படம், எச்.ராஜா முதலமைச்சராக நடித்துள்ள முக்கியமான கதையுடன், வரும் 30-ந்தேதி தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவரான எச்.ராஜா ஏற்கனவே ‘கந்தன் மலை’ என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது 'செய் செய்யாதே' என்ற புதிய படத்தில் நடித்திருக்கிறார்.
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரிப்பில், எஸ்.ராஜா இயக்கியுள்ளார். குரு விஜய், தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா பிரீத்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் எச்.ராஜா முதலமைச்சராக நடித்திருக்கிறார்.
இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம், மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்ற முக்கியமான கருத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, செவிலியர்களின் சேவை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் சமூகத்தின் மீதான ஒவ்வொருவரின் பொறுப்பு ஆகியவற்றையும் வலுவாக எடுத்துரைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படம் வருகிற 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்நாடு முழுக்க சுமார் 100-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படத்தை வெளியிடுகின்றனர்.