

சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கும் 'சீன்' படத்தின் முதல் பாடல் 'ஆத்தி இவ யார்ரா' நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் ரூ.88 கோடிக்கு பெற்றுள்ளது. சூர்யா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படமான ‘சீன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மலையாள நடிகர் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
'ஆவேஷம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட், ழகரம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு அடுத்தம் மாதம் 6-ந்தேதி வெளியாகவுள்ள இப்படம், சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ‘சீன்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.88 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ‘சீன்’ படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி இவ யார்ரா’ பாடல் நாளை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
‘கருப்பு’ படத்தின் மூலம் இந்த ஆண்டில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார் நடிகர் சூர்யா. அதன் பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதனால் நடிகர் சூர்யாவின் ஹாட்ரிக் ஹிட்டாக இந்தப் படம் அமையுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.