

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ திரைப்படம் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன. நகைச்சுவை, திகில் மற்றும் ஜாம்பி கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் எழுதி இயக்கும் இப்படம், ஜாம்பி கதைக்களத்தில் திகிலும் நகைச்சுவையும் கலந்த பொழுதுபோக்குப் படமாகத் தயாராகியுள்ளது. பரபரப்பான சூழ்நிலைகளில் சிக்கும் கதாபாத்திரங்களைச் சுற்றி நகைச்சுவை காட்சிகள் பின்னப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு ஃபாக்ஸ்ன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை எஸ்.யுவாவும், படத்தொகுப்பை பிரதீப் ராகவும், கலை இயக்கத்தை வி. சசிகுமாரும், சண்டைப் பயிற்சியை ஆர்.சக்தி சரவணனும் கையாண்டுள்ளனர். இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத இறுதியில் நிறைவடைந்தது. சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு திரைக்கு வரும் முக்கியப் படமாக ‘லவ் பைட்’ அமைந்துள்ளது.