

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பாரா பவர்லிஃப்டிங் வீரர் ஜண்டு குமார், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் உடற்பயிற்சி அர்ப்பணிப்பு மற்றும் 'தபாங்' திரைப்படம் தான் தனது வாழ்க்கை முறையையே மாற்றியது குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட ஜண்டு குமார், சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட பிறகு சந்தித்த சவால்களைப் பற்றிப் பேசினார். 2010-இல் வெளியான சல்மான் கானின் 'தபாங்' திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான் அவருக்குள் பாடிபில்டிங் மற்றும் உடற்பயிற்சி மீது தீராத ஆர்வம் பிறந்தது.
திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சல்மான் கானின் சட்டை கிழிந்து அவருடைய கட்டுக்கோப்பான உடலமைப்பு வெளிப்படும் போது, தனக்கும் அத்தகைய பாசெப்ஸ், டிரைசெப்ஸ் மற்றும் வலுவான மார்புப் பகுதியைக் கொண்ட உடலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் எழுந்ததாக அவர் தெரிவித்தார்.
ஐந்து வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்ட ஜண்டு குமார், தனது உடல் குறைபாட்டை ஒரு தடையாக என்றுமே கருதியதில்லை. சல்மான் கானை முன்மாதிரியாகக் கொண்டு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்லத் தொடங்கிய அவர், தனது மேல் உடலை வலுப்படுத்தி பவர்லிஃப்டிங் விளையாட்டிற்குள் அடிஎடுத்து வைத்தார். காய்கறி விற்பனை மற்றும் இ-ரிக்ஷா ஓட்டுதல் எனப் பல வறுமைகளுக்கு மத்தியிலும் தனது விடாமுயற்சியைக் கைவிடாமல் பயிற்சி செய்து, 2026 காமன்வெல்த் போட்டியில் பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை தேடித்தந்துள்ளார்.
1998-இல் வெளியான 'பியார் கியா தோ டர்னா கியா' படத்தில் 'ஓ ஓ ஜானே ஜானா' பாடல் மூலம் சட்டை அணியாமல் தோன்றி இந்தியளவில் மிகப்பெரிய ஃபிட்னஸ் ட்ரெண்டை உருவாக்கியவர் சல்மான் கான். இன்று வரை தனது கடுமையான உடற்பயிற்சி வீடியோக்கள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார்.