அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் அறிவிப்பு

இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்த ஒரு கனவு நனவாகும் தருணம் என்று சொல்வது கூட மிக குறைவானதுதான்.
robert pattinson
Published on: 

"தி பேட்மேன்" (The Batman) மற்றும் "தி ஒடிஸி" (The Odyssey) ஆகிய படங்களில் நடித்த ராபர்ட் பேட்டின்சன், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஆறு தசாப்தங்களுக்கும் மேலான சினிமா வரலாற்றை கொண்ட, கற்பனை கதாபாத்திரமான '007' உளவாளியின் வேடத்தில் நடித்த நடிகர்களின் பட்டியலில் ராபர்ட் பேட்டின்சனும் இணைந்துள்ளார்.

இவருக்கு முன்னதாக டேனியல் கிரெய்க், ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 1962-ல் வெளியான "டாக்டர் நோ" (Dr. No) திரைப்படத்தில் சீன் கானரி முதன்முதலில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.

மிகப்பெரிய கௌரவம்:

இது குறித்து ராபர்ட் பேட்டின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சினிமா வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ஜேம்ஸ் பாண்ட். அத்தகைய '007' கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

என் மீது நம்பிக்கை வைத்த டெனிஸ், ஏமி, டேவிட், தான்யா மற்றும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் (Amazon MGM Studios) குழுவினருக்கு நான் மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்த ஒரு கனவு நனவாகும் தருணம் என்று சொல்வது கூட மிக குறைவானதுதான். இந்த அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றப்போவதை நினைத்து நான் மிகுந்த உற்சாகமடைகிறேன்" என்று கூறியுள்ளார்.

டெனிஸ் வில்லினியூவ் (Denis Villeneuve) இயக்கத்தில் உருவாகும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில், யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்து பல மாதங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு, ராபர்ட் பேட்டின்சனின் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

சிறப்பான ஆண்டு:

ராபர்ட் பேட்டின்சனுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் "தி டிராமா" (The Drama) படத்தில் நடித்த அவர், தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலனின் "தி ஒடிஸி" (The Odyssey) மற்றும் "பிரைம் டைம்" (Primetime) ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.

இந்த ஆண்டின் இறுதியில், டெனிஸ் வில்லினியூவ் இயக்கத்தில் உருவாகும் "டியூன் - பார்ட் த்ரீ" (Dune: Part Three) திரைப்படத்திலும் அவர் வில்லனாகவே நடிக்கிறார்.

X