நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட பிறகும், சினிமா உலகில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா தனது தற்போதைய பிஸியான திரையுலக வாழ்க்கை மற்றும் கணவர் விஜய் தேவரகொண்டாவுடனான திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாகப் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த பிரம்மாண்ட படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பிறகான தனது வாழ்க்கை மற்றும் வேலை குறித்து ராஷ்மிகா அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்."சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த போதே நான் திருமணம் செய்து கொண்டாலும், திருமணத்திற்குப் பின்பும் எனது வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.
என்னுடைய திரையுலகப் பயணம் எப்போதும் போல பிஸியாகத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது." என்று எதார்த்தமாக கூறினார்.
தனது காதல் கணவர் குறித்துப் பகிர்ந்து கொண்ட ராஷ்மிகா, "நானும் விஜய்யும் முதலில் நல்ல நண்பர்களாக இருந்து, இப்போது வாழ்க்கைத் துணையாக மாறியிருக்கிறோம்.
விஜய் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய ஒரு நபர். அதே சமயம், அவர் தன் வேலையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கக் கூடியவர்" என்று பாராட்டியுள்ளார்.
தொடர்ச்சியாகப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வருவதால் ஏற்பட்டுள்ள வேலைப்பளு குறித்துப் பேசிய அவர், "தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், எனக்குச் சரியாகத் தூங்கக்கூட நேரமில்லை. ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குகிறேன்" என்று தனது கடின உழைப்பைக் குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்திற்குப் பின்னும் தனது கேரியரில் அசுர வேகத்தில் பயணிக்கும் ராஷ்மிகாவின் இந்த அர்ப்பணிப்பு, அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.