ராமாயணா திரைப்படம் ‘கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை’ பரப்புகிறது; படத்தை புறக்கணிக்க இந்து அமைப்புகள் அழைப்பு

ராவணனை புனிதப்படுத்துவதாகவும், மூலக் கதையின் சம்பவங்களை திரித்துக் கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Ramayana
Published on: 
Summary

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்துள்ள ராமாயணா: பாகம் 1 திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ராமாயணத்தின் மூலக் கதையைத் திட்டமிட்டே மாற்றியமைத்துள்ளதாகக் கூறி, இந்து அமைப்புகள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்து ஜனஜாக்ருதி சமிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா ஆகிய அமைப்புகள் செய்தியாளர்களைச் சந்தித்துத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தன. இத்திரைப்படத்தில் ராவணனைப் புனிதப்படுத்தும் விதமாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராகவும், ஏழைகளுக்குத் தங்க வீடுகளை வழங்கிய நீதியின் காவலனாகவும் சித்தரித்திருப்பது கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் திணிக்கும் செயல் என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும், பணிப்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்ததற்காகச் சூர்ப்பனகையின் கணவர் வித்யுத்ஜீவனை ராவணன் கொல்வது போன்ற காட்சிகளுக்கும் அவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தணிக்கை வாரியத்திற்கு கேள்வி

வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பல சம்பவங்கள் திரைப்படத்தில் புகுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவ்வமைப்புகள், ராமரும் லட்சுமணனும் ராவணனின் படைகளுக்குப் பயந்து ஓடுவது போலவும், சீதை அரக்கர்களுடன் போரிடுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது ராமர் மற்றும் லட்சுமணனின் வீரத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் எனத் தெரிவித்துள்ளன. இந்து ஜனஜாக்ருதி சமிதியின் மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநில அமைப்பாளர் சுனில் கன்வத் பேசுகையில், சனாதன இந்துக்கள் இப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 'மெசஞ்சர் ஆஃப் காட்', 'தி டாவின்சி கோட்' மற்றும் 'கமல் தமால் மலமால்' போன்ற படங்களுக்குத் தடை விதித்தோ அல்லது காட்சிகளை நீக்கியோ நடவடிக்கை எடுத்த மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம், இந்துக்களின் மத உணர்வுகளை மட்டும் ஏன் புண்படுத்துகிறது என்று அவர் கேள்வி எழுப்பினார். இதேபோல் சனாதன் சன்ஸ்தா செய்தித் தொடர்பாளர் அபய் வர்தக் கூறுகையில், ஸ்ரீராமரை ஆதர்சமாகக் கொண்ட அரசு ஆட்சியில் இருக்கும்போது, வரலாற்றையும் இதிகாசத்தையும் திரித்துக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

படக்குழுவினரின் விளக்கம்

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டதாகவும், அதே சமயம் இந்தியாவில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட ராமாயணப் பதிப்புகளில் இருந்து சில சுவாரசியமான அம்சங்களை ஒன்றிணைத்து ஒரு முழுமையான திரைக்கதையை உருவாக்கியுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார். ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ள இப்படம், ஒருபுறம் வசூல் சாதனை படைத்து வந்தாலும், மறுபுறம் எழுந்துள்ள இந்தப் புறக்கணிப்பு அழைப்பால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X