‘காளை வந்துட்டேன்னு சொல்லு!’ – ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸாகும் ‘முரட்டுக்காளை’!

46 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.
MurattuKaalai
Published on: 
Summary

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த ‘முரட்டுக்காளை’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இப்படத்தைத் தயாரித்த பாரம்பரியமிக்க AVM நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில்!

1980-ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் இமாலய வசூல் சாதனை படைத்த இத்திரைப்படம், சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு நவீன தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.

"‘காளை’ வந்துட்டேன்னு சொல்லு" என்ற மாஸ் வசனத்துடன் வெளியாகியுள்ள இந்த ரீ-ரிலீஸ் அறிவிப்பு, ரஜினி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று இப்படம் வெளியாவதால், திரையரங்குகளில் திருவிழாக் கோலம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘முரட்டுக்காளை’ படத்தின் சிறப்பம்சங்கள்

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் இப்படம் உருவானது.

ரஜினிகாந்த் ‘காளையன்’ என்ற கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். அவருடன் ரதி அக்னிஹோத்ரி, சுமலதா, ஜெய்சங்கர், ஒய்.ஜி. மகேந்திரன், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் இசையில் இடம்பெற்ற “பொதுவாக எம்மனசு தங்கம்”, “எந்தப் பூவிலும் வாசம் உண்டு”, “மாமன் மச்சான்” ஆகிய பாடல்கள் இன்றளவும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகின்றன.

ஏற்கனவே ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அண்ணாமலை’ திரைப்படமும் ரீ-ரிலீஸாகவுள்ள நிலையில், தற்போது ‘முரட்டுக்காளை’ படமும் இணைந்திருப்பது தலைவர் ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

X