

திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும், நடன இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், இன்று தனது பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்.
இன்று 50-வது அகவையில் (கோல்டன் ஜூப்ளி) அடியெடுத்து வைக்கும் ராகவா லாரன்ஸுக்கு, இந்த ஆன்மீகப் பயணம் மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக அமைந்தது.
நடிகர் ராகவா லாரன்ஸ் எப்போதுமே தனது தாயார் கண்மணிக்குத் தனது வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பவர். தனது 50-வது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடாமல், தனது தாயாரை நேரில் அழைத்துக்கொண்டு திருவண்ணாமலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதிக்குச் சென்று, அங்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக மற்றும் அர்ச்சனை வழிபாடுகளில் லாரன்ஸ் கலந்துகொண்டார்.
ராகவா லாரன்ஸ் அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்த தகவல் பரவியதும், உள்ளூர் ரசிகர்களும், பக்தர்களும் அவரைக் காணவும், பிறந்தநாள் வாழ்த்து கூறவும் கோயில் வளாகத்தில் திரண்டனர். ரசிகர்களின் வாழ்த்துகளை அவர் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.
பிறந்தநாளையொட்டி ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, 'இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, நான் ஏற்கனவே உங்களுடன் பகிர்ந்து கொண்டபடி ஒரு புதிய முயற்சியைத் தொடங்குகிறேன்.
அதுதான் 'பட்டுச்சேலை திட்டம்' . ஒவ்வொரு தாயின் முகத்திலும் புன்னகையைக் காண்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். உங்கள் அனைவரின் ஆசியோடு, இன்னும் பல வழிகளில் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தனது அறக்கட்டளை மூலம் ஏற்கனவே பல நூறு பேருக்கு மருத்துவ மற்றும் கல்வி உதவிகளைச் செய்து வரும் லாரன்ஸ், தற்போது தாய்மார்களைக் கௌரவிக்கும் வகையில் இந்த பட்டுச்சேலை வழங்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
வழக்கமாகவே திருவண்ணாமலை மீது அதீத பக்தி கொண்ட ராகவா லாரன்ஸ், இந்த விசேஷ பிறந்தநாளில் அண்ணாமலையாரை தரிசித்து, கிரிவலம் சென்று பிராத்தனை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், தனது 'ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை' மூலம் வழக்கம் போல ஆதரவற்ற குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் இன்றைய தினத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போது ராகவா லாரன்ஸ் லோகேஷ் கனகராஜின் எழுத்து மற்றும் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'பென்ஸ்'திரைப்படத்தில் மிகத் தீவிரமாக நடித்து வருகிறார். இது தவிர எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் 'ஹண்டர்' மற்றும் சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா' போன்ற பல பிரம்மாண்ட திரைப்படங்கள் இவரது கைவசம் உள்ளன.
தனது 50-வது பிறந்தநாளில் அண்ணாமலையாரின் அருளைப் பெற்றுள்ள ராகவா லாரன்ஸுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக ஊடகங்களில் தங்களின் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.