இந்திய கலாச்சாரத்தை மதிக்காமல் இருந்திருந்தால் நிக் ஜோனஸை காதலித்திருக்க மாட்டேன்: பிரியங்கா சோப்ரா ஓபன் டாக்!

வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த இருவர் இணையும் போது, துணைவரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்திற்கு மரியாதை அளிப்பது மிக முக்கியம்.
priyanka chopra-Nick Jonas
Published on: 

சர்வதேச அளவில் புகழ்பெற்ற பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, தனது கணவரும் அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸ் உடனான திருமண வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வெவ்வேறு பண்பாட்டு பின்னணியைக் கொண்டவர்கள் இணையும் போது பரஸ்பர மரியாதை எவ்வளவு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

பண்பாட்டு மரியாதையும் காதலும்

நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நிக் ஜோனஸ் இந்திய பாரம்பரியத்தை மனதார ஏற்றுக்கொண்டதே தங்களது பிணைப்பிற்கு முக்கிய காரணம் என்று கூறிய அவர், ஒருவேளை நிக் தனது இந்திய கலாச்சாரத்தை நேசித்து மதிக்காமல் இருந்திருந்தால், தம்மால் அவரை காதலித்திருக்க முடியாது என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த இருவர் இணையும் போது, துணைவரின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்திற்கு மரியாதை அளிப்பது மிக முக்கியமான அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உறவை பலப்படுத்தும் அன்பு

வாழ்க்கை பயணத்தில் இருவருமே ஒருவருக்கொருவர் மிகப்பெரிய ஆதரவாக இருந்து வருவதாகத் தெரிவித்துள்ள பிரியங்கா, கலாச்சார பாரம்பரியங்களை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், துணையிடம் அன்பாகவும் கருணையோடும் நடந்து கொள்வதே உறவை நீண்டகாலம் பலமாக வைத்திருக்க உதவும் என்றும் கூறியுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ‘சைக்கிள் ஆஃப் லவ்’ என்ற ஆவணப்படத்தின் திரையிடலின் போது பிரியங்கா இந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த ஆவணப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பிரியங்கா பணியாற்றியுள்ளார்.

திரைத்துறையில் மிகவும் பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் பிரித்விராஜ் சுகுமாரன் நடிக்கும் 'வாரணாசி' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். மேலும், ஹாலிவுட்டில் ‘சிட்டாடல்’ சீசன் 2 தொடரிலும், ரசல் குரோவுடன் இணைந்து ‘ப்ளூஃப்ளை’ என்ற அறிவியல் புனைகதை படத்திலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com