

திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் குமார், மோட்டார் வாகனப் பந்தயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். சர்வதேச அளவில் நடைபெறும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் அவர், சமீபத்தில் 'அஜித் குமார் ரேசிங்' என்ற சொந்தப் பந்தய அணியை உருவாக்கி, பல்வேறு சர்வதேசப் தொடர்களில் களம் இறக்கி வருகிறார்.
தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் லீமேன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் அஜித்தின் அணி தீவிரமாகப் போட்டியிட்டது. பந்தயம் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில், அஜித்தின் ரேஸ் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடற்ற கார், களத்தில் இருந்த மற்றொரு காரின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலைத் தொடர்ந்து, காரில் சக்கரங்கள் செயலிழந்ததுடன் அடுத்தடுத்து தீவிர தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டன
காரின் முன்பகுதி சேதமடைந்தபோதிலும், நவீன ரேசிங் கார்களில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் அஜித்தைக் காப்பாற்றின. மேலும், பல ஆண்டுகால பந்தய அனுபவமும் தொழில்முறை திறனும் கொண்ட அஜித், எவ்வித காயமும் இன்றி காரில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார்.
அஜித் விபத்தில் சிக்கிய செய்தி பரவியதும் உலகம் முழுவதிலும் உள்ள அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். ஆனால், அவர் காயம் எதுவும் இன்றி நலமாக திரும்பியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் வெளியான பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
நடிகர் அஜித் கார் பந்தயங்களில் விபத்தைச் சந்திப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இத்தாலி, ஸ்பெயின், மலேசியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பந்தயங்கள் மற்றும் பயிற்சிகளின் போது அவர் விபத்துகளை எதிர்கொண்டு, லேசான காயங்களுடன் மீண்டுள்ளார். அபாயங்கள் நிறைந்த விளையாட்டாக இருந்தாலும், சவால்களை எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் பந்தயக் களத்தில் சாதனை படைத்து வருகிறார் அஜித்.