'பிக்காசோ' படத்தின் முதல் பாடல் Hakuna Matata வெளியானது!

'பிக்காசோ' திரைப்படத்தின் முதல் பாடலை அபிஷன் ஜீவிந்த் தனது சொந்த குரலில் பாடியுள்ளார்.
Hakuna Matata  song
Published on: 
Summary

'Tourist Family' திரைப்படத்தின் மூலம் இயக்குநராகக் கவனம் ஈர்த்து, 'With Love' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் முத்திரை பதித்த அபிஷன் ஜீவிந்த், தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமாருடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'பிக்காசோ' (Picasso).

அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாடலான "ஹக்குனா மட்டாட்டா" வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

பாடகராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த்

பிரபல இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையமைத்து, தயாரித்துள்ள இப்பாடலை நடிகர் அபிஷன் ஜீவிந்த் தனது துள்ளலான குரலில் பாடியுள்ளார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

பாடலாசிரியர் தமிழ் ஆதவன் வரிகள் எழுதியுள்ள இப்பாடலில், "ரிச்சா ரிச்சா மாறணும், ராஜா கொடி ஆகணும், வட்டாரமே வட்டாரமா நம்மள பாக்கணும்... ஹக்குனா மட்டாட்டா" எனக் கவலைகளை மறந்து வாழ்க்கையைக் கொண்டாடும் உற்சாகமான வரிகள் இடம்பெற்றுள்ளன.

தொழில்நுட்பக்குழு

லியோன் ஜேம்ஸின் எலக்ட்ரானிக் பீட்ஸ்களுடன் நாடாஸ் பாலாவின் பாரம்பரிய நாதஸ்வர இசையும் இணைந்து பாடலுக்குப் பெரும் வைப் கொடுத்துள்ளது. அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் நாராயணன் ரவிசங்கர் ஆகியோர் பின்னணிக் குரல் கொடுத்துள்ள இப்பாடலுக்கு பாபா பாஸ்கர் மற்றும் ரகு தாபா நடனம் அமைத்துள்ளனர்.

பிரபல இசை நிறுவனமான திங்க் மியூசிக் இந்தியா யூடியூப் தளத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நட்சத்திரப் பட்டாளம்

காமெடி மற்றும் உணர்வுபூர்வமான குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் 'சுகன்' என்ற கதாபாத்திரத்திலும், அவருக்குத் தந்தையாக டாக்டர் சிவராஜ்குமாரும் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக ஷிவானி நாகராம் தமிழில் அறிமுகமாக, 'டூரிஸ்ட் ஃபேமிலி' புகழ் யோகலட்சுமி, கானா வினோத், சங்கீதா மாதவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பு மற்றும் வெளியீட்டுத் தகவல்

டிராமா கம்பெனி நிறுவனம் சார்பில் ஏ. பாலமுருகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரகதீஷ் பிரபு எஸ் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் குமார் கே படத்தொகுப்பையும், விஜி விஜயன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள 'பிக்காசோ' திரைப்படம், வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

X