

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஓம்' (OM) திரைப்படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ.31.55 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் அதிக முதல் நாள் வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற மாபெரும் பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்தப் பிரம்மாண்டத் திரைப்படம் நேற்று முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் தனுஷுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உளவாளி மற்றும் செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதை, தமிழ்நாடு தொடங்கி துபாய் வரை விரிந்து கிடக்கும் சர்வதேசக் கடத்தல் வலையமைப்பைச் சுற்றி விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பால் வசூல் மழை பொழிந்துள்ளது.
இந்தியாவில் முதல் நாளில் ரூ.17.70 கோடி நிகர வசூலும், மொத்தமாக ரூ.20.55 கோடி வசூலும் கிடைத்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் ரூ.11 கோடி வசூல் ஆனதன் மூலம், உலகளவில் ஒட்டுமொத்தமாக ரூ.31.55 கோடியைக் குவித்துள்ளது.
வெளியான மொழிகளில் தமிழ்ப் பதிப்பே அதிகபட்ச வசூலை ஈட்டியுள்ளது. குறிப்பாக, முதல் நாளில் தமிழில் ரூ.13.35 கோடியும், தெலுங்கில் ரூ.4 கோடியும், இந்தியில் ரூ.35 லட்சமும் வசூலாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை தனுஷ் நடிப்பில் வெளியாகி முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக 'தேரே இஷ்க் மெய்ன்' திரைப்படம் ரூ.16 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது அந்தத் தொகையை இரட்டிப்பாக்கிப் புதிய சாதனை படைத்துள்ள 'ஓம்' திரைப்படம், தனுஷின் முந்தைய வெற்றிப் படங்களான 'ராயன்', 'குபேரா', 'கர' ஆகியவற்றின் முதல் நாள் வசூல் சாதனைகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
முதல் நாளிலேயே பிரம்மாண்டத் தொடக்கத்தைப் பெற்றுள்ள 'ஓம்' திரைப்படம், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாக்ஸ் ஆபிஸில் மேலும் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினரிடையே எழுந்துள்ளது.