நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த கணவர் - இணையதளத்தில் வைரல்..

மறுபடி பிறந்தாலும்... நீயே வேணும்... லவ் யூ என் உயிரே, உலகமே, என் தங்கமே... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - விக்னேஷ் சிவன்
Nayanthara - Trisha - Vignesh Shivan
Published on: 
Summary

தென்னிந்திய சினிமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, நேற்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இதனையொட்டி திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். குறிப்பாக, நடிகை திரிஷா மற்றும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் வாழ்த்துப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திரிஷாவின் வாழ்த்து

நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தானும் நயன்தாராவும் கடற்கரையில் நின்றபடி சூரிய அஸ்தமனத்தை ரசித்து மகிழும் அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்துடன், "எதிர்காலத்தில் இது போன்ற இன்னும் பல சூரிய அஸ்தமனங்களை நாம் இருவரும் இணைந்தே ரசிக்க வாழ்த்துகள்" எனத் தனது நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகில் சக போட்டியாளர்களாகக் கருதப்பட்ட இவர்களது ஆழமான நட்பை வெளிப்படுத்தும் இந்தப் பதிவு, இருவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சி வீடியோ

மறுபுறம், பிரபல இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், தனது மனைவிக்காக வீடு முழுவதும் அவர்களது திருமணத் தருணங்கள், சுற்றுலாப் பயணங்கள் மற்றும் மகன்களான உயிர் - உலக் ஆகியோருடன் எடுத்த அரிய குடும்பப் புகைப்படங்களை அழகாக ஒட்டி, உணர்வுபூர்வமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘நானும் ரௌடி தான்’ படத்தின் ‘நீயும் நானும் அன்பே’ பாடல் பின்னணியில் ஒலிக்க, அந்தப் பதிவில் விக்னேஷ் சிவன், "மறுபடி பிறந்தாலும்... நீயே வேணும்... லவ் யூ என் உயிரே, உலகமே, என் தங்கமே... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவர்கள் மட்டுமில்லாமல் பல திரைப் பிரபலங்களும், நயன்தாரா நடித்து வரும் புதிய படங்களின் தயாரிப்பு நிறுவனங்களும் சிறப்புப் போஸ்டர்களை வெளியிட்டு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

X