

தமிழ் சினிமாவில் வழக்கமான பாணியிலிருந்து விலகி, வித்தியாசமான கதைக்களங்களுடன் நகைச்சுவையைக் கலந்து திரைப்படங்களை உருவாக்குவதில் தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் வெளியான ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘அறை எண் 305-ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த ‘புலி’, மற்றும் ‘கசட தபற’, ‘போட்’ ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது நடிகர் விமலை வைத்து ‘நவோரியா’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்ததோடு, படத்தில் இடம்பெற்றுள்ள முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி விமல் ‘ஆதி’ என்ற கதாபாத்திரத்திலும், அன்ஷீத்தல் ‘அபி’ என்ற கதாபாத்திரத்திலும், ஆரி அர்ஜுனன் ‘கவுதம் ராஜேந்திரன்’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தம்பி ராமையா, வடிவுக்கரசி, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவும், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பும் மேற்கொண்டுள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புதேவனின் வித்தியாசமான படைப்பாகவும், விமல் - ஆரி அர்ஜுனன் கூட்டணியிலும் உருவாகியுள்ள ‘நவோரியா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.