“சோபிதாவை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால் அது ‘காதல்’தான்” - மனைவி குறித்து மனம் திறந்த நாக சைதன்யா!

சோபிதா துலிபாலாவின் துடிப்பான குணத்தையும், அவரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் நடிகர் நாக சைதன்யா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
Naga Chaitanya - Sobhita Dhulipala
Published on: 
Summary

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா, சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது தனது மனைவியும் பிரபல நடிகையுமான சோபிதா துலிபாலா குறித்து அவர் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஆளுமை

சோபிதாவிடம் தனக்குப் பிடித்த குணங்கள் குறித்துப் பேசிய நாக சைதன்யா, “சோபிதாவிடம் பல நல்ல குணங்கள் உள்ளன. அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், அவருடைய துடிப்பான குணம்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாரம்பரிய கலாச்சாரத்தையும் நவீன சிந்தனைகளையும் அழகாகக் கலந்த ஒரு தனித்துவமான ஆளுமை அவர். எப்போதும் புதுப்புது விஷயங்களைக் கண்டறியவும், அனுபவிக்கவும் தயாராக இருப்பார்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் திறன்

தங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “நாங்கள் விடுமுறைக்குச் செல்லும்போது எனக்கென்று ஒரு திட்டம் இருக்கும். ஒருவேளை அந்தத் திட்டம் நிறைவேறாமல் போனால், நான் அப்படியே முடங்கிவிடுவேன்.

ஆனால் சோபிதா அப்படியல்ல; உடனடியாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அடுத்ததாக என்ன செய்யலாம் என்பதற்கான வழியைக் கண்டுபிடித்து முன்னோக்கிச் செல்வார்” என்று கூறினார்.

ஒரே வார்த்தையில் ‘காதல்’

மேலும் பேசிய நாக சைதன்யா, “அவருடைய இந்த இயல்பைப் பார்த்து நானும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயல்பாகச் செயல்படவும், புதிய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளவும் அவர்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.

அவரிடம் இருக்கும் அந்த இளமையான துடிப்பும், ஆர்வமும், ஆற்றலும் எனக்கு மிகவும் பிடிக்கும். சோபிதாவை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமென்றால் அது ‘காதல்’தான்” எனத் தனது அன்பை வெளிப்படுத்தினார்.

சோபிதாவின் காதல் பிறந்தநாள் வாழ்த்து

இதற்கிடையே, நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி நடிகை சோபிதா துலிபாலா, அவருக்கு முத்தமிடும் அழகிய புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பே” எனக் குறிப்பிட்டுத் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

X