

தெலுங்கு சினிமாவின் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘ப்ளடி ரோமியோ’ கேங்க்ஸ்டர் பின்னணியிலான அதிரடி, டார்க் காமெடி படம். ‘லியோ’ பாணியில் வெளியான அனிமேஷன் டைட்டில் ப்ரோமோவில், சமையல் கலைஞரும் கொடூர கேங்க்ஸ்டருமான இரட்டை பரிமாண கதாபாத்திரம் என தகவல். பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் நானி நடிப்பில், இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ளடி ரோமியோ' (Bloody Romeo) என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஒரு கேங்க்ஸ்டர் பின்னணியைக் கொண்ட அதிரடி மற்றும் டார்க் காமெடி படமாக எடுக்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நானியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. ‘லியோ’ திரைப்பட பாணியில் இந்த அனிமேஷன் ப்ரோமோ வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் நானி ஒரே நேரத்தில் ஒரு சமையல் கலைஞராகவும் மற்றும் கொடூரமான கேங்க்ஸ்டராகவும் இரட்டை பரிமாணங்கள் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாயின. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும், வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் சுகுமாரனும் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தில் நானிக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும், பிரித்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
இதனால் இனிவரும் நாட்களில் ‘ப்ளடி ரோமியோ’ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.