குழந்தையின் மொட்டை அடிக்கும் விழா: மீண்டும் இணைந்து புகைப்படங்களை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிசில்டா!

கடந்த ஆறு மாதங்களாகத் தனது மகனுக்கான அனைத்து கடமைகளையும் அன்போடும் அர்ப்பணிப்போடும் நிறைவேற்றி வருகிறேன்.
Madhampatti Rangaraj-Joy Griselda
Published on

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட குடும்பச் சிக்கல்கள் கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக இருந்து வந்தன. இந்த நிலையில், தற்போது இருவரும் இணைந்து தங்களின் மகனுக்கு மொட்டை அடிக்கும் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்து வந்த மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அதே வேளையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் நிலுவையில் இருந்து வந்தது.

மரபணு சோதனை

சட்டப் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், கர்ப்பமாக இருந்த ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. நீதிமன்ற விசாரணையின் போது, குழந்தையின் உயிரியல் தந்தை மதாம்பட்டி ரங்கராஜ் தான் என்பது உறுதியானது. இந்த அறிக்கை வெளியானதை கடந்த ஏப்ரல் மாதம் ஜாய் கிரிஸில்டா அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தினார். மேலும் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்றும் பெயரிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தையின் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ரங்கராஜின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மகனுக்கு ஆதரவு

இந்த வழக்கு மற்றும் சர்ச்சைகளுக்கு நடுவே, மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகன் ராகா ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆறு மாதங்களாகத் தனது மகனுக்கான அனைத்து கடமைகளையும் அன்போடும் அர்ப்பணிப்போடும் நிறைவேற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மகனின் எதிர்காலத் தேவைகள் அனைத்தையும் தொடர்ந்து வழங்குவதாகவும், அவன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு பக்கபலமாக நின்று ஆதரவளிப்பேன் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

இந்தச் சுமுகமான முடிவைத் தொடர்ந்து, தங்களது மகனுக்கு மொட்டை அடிக்கும் கோயில் சடங்கில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்ட இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com