

சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழுந்தையை ஏற்று, அக்குழந்தைக்கு இனி வாழ்நாள் முழுவதும் துணைநிற்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில்.,
“அனைவருக்கும் வணக்கம். எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாகச் செய்யவேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப் பொறுப்புடனும், அன்புடனும் செய்து வருகிறேன்.
இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், தான் கர்ப்பமாக இருந்தபோது தன்னை விட்டுப் பிரிந்துவிட்டதாகவும் ஜாய் கிரிசில்டா காவல்துறை மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
முதலில் கிரிசில்டாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த ரங்கராஜ், டிஎன்ஏ சோதனையில் தான்தான் அக்குழந்தைக்கு தந்தை என்று முடிவானால் குழுந்தையின் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனிடையே கடந்த ஆண்டு ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, குழந்தைக்குத் தந்தை, ரங்கராஜ் தான் என டி.என்.ஏ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும் குழந்தையை சென்று பார்க்காமல் ரங்கராஜ் இருந்து வந்தார்.
இந்நிலையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.