

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தை திரையுலகினரும் ரசிகர்களும் கொண்டாடி வரும் வேளையில், இயக்குனர் மாரி செல்வராஜ் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
விளிம்புநிலை மக்களின் கதைகளைத் திரையில் கொண்டு வந்ததற்காக ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம். எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.
இந்த மகிழ்ச்சிக்கு காரணமான இயக்குநர் திரு.கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்... என்று மனதார பாராட்டியுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் 10-வது திரைப்படமான 'டோரதி', மதுரை கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் ரிஷிகாந்த் (கார்த்தி) மற்றும் சனந்த் (சுப்பு) ஆகிய இரு நண்பர்களின் வாழ்க்கையில், கீர்த்தி சுரேஷ் (டோரதி) என்ற கதாபாத்திரத்தின் வருகைக்குப் பின் ஏற்படும் மாற்றங்களே படத்தின் கதையாகும்.
ஆண்மை, நட்பு, பாலின அடையாளம், வன்முறை, சமுதாய ஏற்பு மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் குறித்து இத்திரைப்படம் ஆழமாகப் பேசுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'டோரதி', அங்குள்ள சர்வதேச பார்வையாளர்களிடம் எழுந்து நின்று கைதட்டும் பாராட்டைப் பெற்றது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவே ஆகும். மேலும், கார்த்திக் சுப்புராஜ் - இளையராஜா கூட்டணியில் உருவான முதல் திரைப்படமும் இதுவே.
மாரி செல்வராஜுக்கு முன்பாகவே, தமிழ் சினிமா இதுவரை பேசத் தயங்கிய ஒரு கருப்பொருளை தைரியமாகப் பேசியுள்ளதாகக் கூறி நடிகர் சூர்யா படக்குழுவைப் பாராட்டியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து மம்மூட்டி, மணிரத்னம், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணித் திரையுலக பிரபலங்களும் 'டோரதி' திரைப்படத்தைப் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.