தமிழ் சினிமாவில் புதிய சாதனை: ‘இரும்புத் தோட்டம்’ படத்தில் நடித்துள்ள மலேசிய துணை மந்திரி!

படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் சூழல் அனைத்தும் எனது சிறுவயது நினைவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை.
Malaysian Tamil Movie - Irumbu Thottam
Published on: 
Summary

‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹேவன் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கே. கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத் தமிழ்த் திரைப்படம் ‘இரும்புத் தோட்டம்’.

ஏ.வி.எல்.டி புரொடக்‌ஷன் சார்பில் ஜெகன் ஜான் பீட்டர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் புலனாய்வு க்ரைம் த்ரில்லர் திரைப்படம், விரைவில் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மலேசிய துணை மந்திரியின் சிறப்புத் தோற்றம்

இப்படத்தில் இர்பான் ஜைனி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ். வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி, கலைமாமணி கே.எஸ். மணியம், நிஷா மற்றும் விஜய் நாயுடு உள்ளிட்ட பல மலேசிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சிறப்பம்சமாக, மலேசியத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை மந்திரி துவான் யுனேஸ்வரன் ராமராஜ் ‘துவான் தெய்வீகன்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பதவியில் இருக்கும் ஒரு துணை மந்திரி மலேசியத் தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இயக்குநரின் பார்வை

தினேஷ் குமார் டி.கே ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ஷமேஷன் மணிமாறன் இசையமைத்துள்ளார். படம் குறித்து இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமார் கூறுகையில், “நவீன சமூகத்திலும் கூடப் பேசத் தயங்கும் விஷயங்களைச் சுற்றியுள்ள மவுனத்தை உடைப்பதே ‘இரும்புத் தோட்டம்’ படத்தின் மூலம் எனது நோக்கமாக இருந்தது. குற்றப் புலனாய்வுத் திரைப்படங்களின் தீவிர ரசிகன் என்ற முறையில், இந்தக் கடினமான சமூக யதார்த்தங்களைப் பேசுவதற்குப் புலனாய்வு வகையின் விறுவிறுப்பையும் பதற்றத்தையும் ஒரு பாலமாகப் பயன்படுத்த விரும்பினேன்” என்றார்.

மேலும் பேசிய அவர், “படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் சூழல் அனைத்தும் எனது சிறுவயது நினைவுகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்பதுடன், எனது சொந்த ஊரான மலாக்காவில் உள்ள டெபோங்கில் தான் முழுப் படத்தையும் படமாக்கியுள்ளோம். சமூக விதிமுறைகள் குறித்த பார்வையாளர்களின் கண்ணோட்டத்திற்குச் சவால் விடுவது போல இப்படம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

X