

இந்த டிஜிட்டல் யுகத்தில் மக்களின் கவனம் எதன் மீது எப்போது திரும்பும் என்றே கணிக்க முடியாத நிலை தான் உள்ளது.
மிகவும் சாதராண விஷயம் வைரலாவதும், எதிர்பார்க்கப்பட்ட ஒன்று குப்பைக்கு போவதும் சகஜமாகி வருகிறது.
7 ஆயிரம் வருட பழமையான மகாகாவியம், உலகையேயே பிரமாண்டத்திற்கு பெயர்போன இயக்குநரால் உருவாக்கப்பட்டபோதும், வெறும் 2 பேர் மட்டும் இணைத்து உருவாக்கிய ஒரு அனிமேஷன் படம் அதிக கவனம் பெற்றுள்ளது சீனாவில்.
அதற்கு அப்படம் கிறிஸ்டோபர் நோலனின் ஒடிசியை விட நன்றாக இருப்பதால் இல்லை. எதிர்மாறாக, மிகவும் மோசமாக இருப்பதால் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மையில் வெளியாகிய தி ஒடிசி மற்றும் ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே படங்கள் உலக பாக்ஸ் ஆபீசில் சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் உருவாக்கப்பட்ட 'நியூ லாய்' ((Niu Lai - The Cow Is Coming) என்ற படம் தான் இப்போது ஹாட் டாபிக்.
86 நிமிட நீள அனிமேஷன் திரைப்படம், ஒரு கன்றுக்குட்டிக்கும் பறவைக்கும் இடையிலான உறவை கதைக்களமாகக் கொண்டது.
சின் யுமெங் மற்றும் சுன் லிபாங் ஆகிய இருவர் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளில் இந்த முழுப் படத்தையும் எழுதியும், இயக்கியும், தயாரித்தும், குரல் கொடுத்தும் உருவாக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் தாய் மற்றும் மகன் ஆவர். இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சம் இதன் பட்ஜெட்.
கடந்த ஆகஸ்ட் 5 அன்று சீனாவில் வெளியான இத்திரைப்படம், முதல் 10 நாட்களில் வெறும் 7,700 யுவான் (சுமார் ரூ.1.04 லட்சம்) மட்டுமே வசூலித்தது.
நாடு முழுவதிலும் 300க்கும் குறைவான மக்களே இப் படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர்.
இத்திரைப்படத்திற்கு எந்தவொரு விளம்பரமோ ப்ரீ, போஸ்ட் புரொமோஷனோ, ஏன் ஒரு டிரெய்லரோ கூட இல்லை. ஒரு போஸ்டர் மட்டுமே இப் படத்திற்கான ஒரே விளம்பரம்.
படத்தின் மோசமான கிராபிக்ஸ், கதாபாத்திரங்கள், மோசமான குரல் பதிவு மற்றும் குழப்பமான கதையை பார்வையாளர்கள் கேலி செய்யத் தொடங்கினர்.
சிலர் இதை ஏஐ உருவாக்கித் தருவதை விட மோசமானது என்றும் 2026 ன் மிக மோசமான திரைப்படம் என்றும் குறிப்பிட்டனர்.
இதுவே படத்திற்கு சாதகமாக மாறியது. படம் உண்மையிலேயே அவ்வளவு மோசமாகத்தான் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்வதற்காக மக்கள் டிக்கெட்டுகளை வாங்கி திரையரங்கிற்குப் படையெடுக்கத் தொடங்கினர்.
இத்திரைப்படம் இதுவரை 14.9 மில்லியன் யுவான்களுக்கும் மேல் (சுமார் ரூ.20 கோடி) வசூல் செய்துள்ளது.
முதல் 10 நாட்களில் சொற்ப அளவில் வசூலித்து, அடுத்த சில நாட்களிலேயே பன்மடங்காக வசூல் பெருகுவது தி ஒடிசி மற்றும் ஸ்பைடர் மேன் போன்ற பிரமாண்ட படங்களுக்கே சாத்தியமற்றது.
அரங்கு நிறைந்த காட்சி என்பது பெரிய படங்களுக்கே சாத்தியமாகாதபோது இச்சிறிய படம் அதை முறியடித்து வருகிறது.