

திரையுலகில் ஒரு நடிகரின் வாழ்க்கையை ஒரே இரவில் மாற்றியமைக்கும் சில கதாபாத்திரங்கள் அமைவதுண்டு. ஆனால், அந்தப் பாராட்டுக்கள் எப்போதும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளைத் தந்துவிடுவதில்லை.
'மகாநதி' (நடிகையர் திலகம்) படத்தில் சாவித்திரியாக வாழ்ந்து, தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் இதேபோன்ற ஒரு கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், 'மகாநதி' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட தொழில்முறை மற்றும் நிதிசார்ந்த சவால்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் மனம் திறந்துள்ளார்.
2018-ல் வெளியான 'மகாநடி' திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால், இந்தத் திருப்புமுனைக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களுக்கு அவருக்கு ஒரு புதிய பட வாய்ப்பு கூட வரவில்லை.
யாரும் எனக்கு ஒரு கதையைக் கூட வந்து சொல்லவில்லை என்று அவர் அந்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பல ஆண்டுகள் இடைவேளையின்றி நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் இந்த 6 மாத இடைவெளியை ஒரு நிம்மதியான ஓய்வாகவே கருதியுள்ளார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல புதிய படங்கள் எதுவும் அமையாததால், அது அவரது பொருளாதார நிலையைப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
தொடர் வேலைகளுக்குப் பிறகு இந்த ஓய்வு எனக்குத் தேவையாக இருந்தது உண்மைதான். ஆனால், அடுத்த படம் என்ன என்ற நிச்சயமற்ற தன்மை நீடித்தபோது, எனது நிதி நிலைமை மோசமடையத் தொடங்கியது என்று தனது கடினமான நாட்களை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
மகாநதி படத்திற்கு முன்பு வரை கீர்த்தி சுரேஷ் பெரும்பாலும் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்தார். ஆனால், சாவித்திரியின் கதாபாத்திரத்தில் அவர் காட்டிய அசாத்திய நடிப்புத் திறன், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரைப் பார்க்கும் பார்வையை மாற்றியது.
அவருக்கு எந்த மாதிரியான கதைகளைக் கொடுப்பது என்ற குழப்பம் திரையுலகினரிடையே நிலவியதே இந்த 6 மாத இடைவெளிக்குக் காரணம் என்று கீர்த்தி சுரேஷ் கருதுகிறார்.
பண நெருக்கடி மற்றும் எதிர்காலம் குறித்த பயம் இருந்தபோதிலும், அந்த ஓய்வு நாளைப் பற்றி தான் இப்போது வருத்தப்படவில்லை என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
அந்தப் பருவம் தனக்குத் சுய பாதுகாப்பு குறித்தும், பணத்தை எவ்வாறு முறையாக நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்தும் மிக முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
சவாலான அந்தப் பாதையைக் கடந்து வந்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள 'அக்கா' என்ற இணையத் தொடரின் விளம்பரப் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.
1980-களின் பின்னணியில் 'பெர்னூர்' என்ற கற்பனையான தென்னிந்திய நகரத்தில் நடக்கும் கதையான இதில், ராதிகா ஆப்தேயுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் தொடரில் 'பவானி' என்ற சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.