

ஜேசன் சஞ்சயின் இந்தத் திறமைக்கு அவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாட்டி ஷோபா ஆகியோரே முக்கியக் காரணம் என்று சிரஞ்சீவி புகழாரம் சூட்டினார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமும் முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படத்தின் விளம்பர விழா ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலுங்கு திரையுலகின் மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஜேசன் சஞ்சய் குறித்துப் பல சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ளார். இப்படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய சிரஞ்சீவி, ஜேசன் சஞ்சயைச் சந்தித்த முதல் அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
விழா மேடையில் பேசிய சிரஞ்சீவி, "ஜேசன் சஞ்சய் என்னை நேரில் சந்தித்து இந்த விழாவிற்கு அழைப்பு விடுக்க வந்தபோது, எனக்குள் ஒரு பெரிய ஆச்சரியம் ஏற்பட்டது. 1993, 1994 மற்றும் 1995-ஆம் ஆண்டுகளில் அவரது தந்தை விஜய் எப்படி இருந்தாரோ, அதே சாயலில் அப்படியே உரித்து வைத்தது போல் ஜேசன் சஞ்சய் இருக்கிறார். அவரைப் பார்த்ததும் எனக்கு விஜயின் ஆரம்பகால திரைப்பயணமே நினைவுக்கு வந்தது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "உனது தந்தை மிகப்பெரிய நடிகராக இருக்கும்போது, நீ ஏன் நடிகராகாமல் இயக்கத்தை தேர்வு செய்தாய்?" என்று ஜேசனிடம் கேட்டதாகத் தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ஜேசன் சஞ்சய், "எனக்குச் சிறுவயதில் இருந்தே கதைகள் எழுதுவதிலும், திரைப்படங்களை இயக்குவதிலும்தான் அதிக ஆர்வமும் விருப்பமும் இருந்தது. அதனால் தான் இந்த பாதையைத் தேர்ந்தெடுத்தேன்" என்று கூறியதாகச் சிரஞ்சீவி பகிர்ந்துகொண்டார்.
ஜேசன் சஞ்சயின் இந்தத் திறமைக்கு அவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாட்டி ஷோபா ஆகியோரே முக்கியக் காரணம் என்று சிரஞ்சீவி புகழாரம் சூட்டினார். "ஜேசனுக்குள் இருக்கும் இந்த இயக்குநர் திறமை அவரது தந்தையிடம் இருந்து மட்டும் வரவில்லை, அவரது தாத்தா மற்றும் பாட்டியிடம் இருந்துதான் வந்துள்ளது.
எஸ்.ஏ. சந்திரசேகர் மிகச்சிறந்த இயக்குநர்; அவரது மனைவி ஷோபா சிறந்த கதையாசிரியர். இவர்கள் இருவருடனும் நான் இணைந்து பணியாற்றியுள்ளேன். எனது ஆரம்பகால தெலுங்கு படங்களான 'சட்டனிகி கள்ளு லேவு', 'தேவாந்தகுடு' ஆகிய படங்களை எஸ்.ஏ.சந்திரசேகர்தான் இயக்கினார், அதற்கு ஷோபாதான் கதை எழுதினார்" என்று சிரஞ்சீவி தன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், "விஜய் திரையுலகில் அடைந்த பிரம்மாண்டமான உயரத்தை நாம் அனைவரும் அறிவோம். அதேபோல், அவரது மகன் ஜேசன் சஞ்சயும் தனது கனவுப் படமான 'சிக்மா' மூலம் இயக்குநராகப் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்" என்று சிரஞ்சீவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.