நீண்ட காத்திருப்புக்கு பின் திரைக்கு வருகிறதா 'சதுரங்க வேட்டை 2'?

நிதி தொடர்பான சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sathuranga Vettai 2
Published on

அரவிந்த் சாமி மற்றும் திரிஷா பிரதான கதாபாத்திரங்களில் நடித்து, நீண்ட காலமாக ரிலீசாகாமல் தாமதமாகி வந்த 'சதுரங்க வேட்டை 2' திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாவதற்கான சூழல் உருவாகியுள்ளது. தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையிலும் நிதி தொடர்பான சிக்கல்கள் நிலவி வந்த நிலையில் தற்போது அவை சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல விநியோகஸ்தரின் தலையீடு

இத்திரைப்படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் திரையரங்க உரிமையாளர் மற்றும் பிரபல விநியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய பங்கு வகித்துள்ளார். இப்படத்தின் நிதிச் சிக்கல் குறித்து சினிமா ஃபைனான்சியர் மதுரை அன்புச்செழியனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது பேசிய அன்புச்செழியன், "தற்போது எனக்கு பணத் தொகை எதுவும் தேவையில்லை, திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகட்டும்; வசூலாகும் தொகையில் இருந்து எனது பங்கை பிறகு பெற்றுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். இந்த சாதகமான முடிவு, படம் திரைக்கு வருவதற்கு மிகப்பெரிய கதவை திறந்துவிட்டுள்ளது.

மறைந்த நடிகர் மனோபாலாவின் கனவு

2014-ஆம் ஆண்டு வெளியான ஹெச்.வினோத்தின் 'சதுரங்க வேட்டை' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா தயாரித்தார். படம் முடிவடைந்தும் வெளியாவதில் ஏற்பட்ட தடைகள் அவருக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்திருந்தன. கடந்த 2023-ஆம் ஆண்டு அவர் மறைந்த நிலையில், அவரின் பல நாள் கனவாக இருந்த இப்படத்தின் ரிலீஸ் தற்போது சாத்தியமாவது அவருக்கு செய்யும் சமர்ப்பணமாக அமையும்.

ஹெச்.வினோத் கதையமைக்க, என்.வி. நிர்மல் குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, திரிஷா ஆகியோருடன் மறைந்த டானியல் பாலாஜி, நாசர், ராதாரவி, ஸ்ரீமன் மற்றும் தீரஜ் ரத்னம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஏமாற்று வேலைகள் மற்றும் நவீன முறையிலான நிதி மோசடிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com