

இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் டாப்-10 பட்டியலில் 'ஜெயிலர்-2' மற்றும் 'கருப்பு' ஆகிய இரண்டு தமிழ் படங்கள் இடம்பிடித்துள்ளன. உலகளாவிய அளவில் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை இந்த சாதனை வெளிப்படுத்துகிறது.
இந்த ஆண்டை பொறுத்தவரை, இந்திய சினிமாவுக்கு நல்ல வருவாய் கொடுத்த ஆண்டாகவே பார்க்கப்படுகிறது. பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, உலகளாவிய வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றன.
அந்தவகையில் இந்த ஆண்டில் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் டாப்-10 பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த பட்டியலில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான 'துரந்தர்-தி ரிவெஞ்ச்' திரைப்படம் ரூ.1,800 கோடி வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்-2' திரைப்படம் ரூ.760 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப்படம் இன்னும் ஓடிக்கொண்டு இருப்பதால் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது இடத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம்- தி கன்குளூசன்' திரைப்படமும் (ரூ.577 கோடி), 4-ம் இடத்தில் 'அனுமான் அன்ஷ்’ திரைப்படமும் (ரூ.460 கோடி), 5-வது இடத்தில் 'பார்டர்-2' திரைப்படமும் (ரூ.450 கோடி) உள்ளன.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படம் ரூ.360 கோடி வசூலுடன் 6-வது இடத்தில் உள்ளது. 7 முதல் 10 இடங்கள் வரை முறையே 'டாக்ஸிக் (ரூ.342 கோடி), 'பெத்தி' (ரூ.340 கோடி). 'மிர்சாபூர் தி மூவி' (ரூ.335 கோடி), 'பெத்லகேம் குடும்ப யூனிட்’ (ரூ.330 கோடி) ஆகிய படங்கள் தொடருகின்றன.
அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் டாப்-10 பட்டியலில் 'ஜெயிலர்-2'. 'கருப்பு' ஆகிய இரு தமிழ் திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன.