"சிவாஜி அண்ணன் என்னை எப்போதும் 'ராசா' என்றுதான் கூப்பிடுவார்" - 'லெனின் பாண்டியன்' பட விழாவில் இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சி!

'லெனின் பாண்டியன்' வருகிற செப்டம்பர் 25-ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது.
Lenin Pandiyan
Published on
Summary

இயக்குநர் டி.டி.பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லெனின் பாண்டியன்'. இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், கங்கை அமரன், ரோஜா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, 'லெனின் பாண்டியன்' திரைப்படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு இசையமைப்பாளர் இளையராஜா நெகிழ்ச்சியான பதிவை கூறியிருந்தார்.

"ராசா நீயுமா லேட்டு?" - சிவாஜி கணேசனுடனான சுவாரசிய நினைவு

"நான் எப்பொழுதும் காலை 7 மணிக்கு என்னுடைய ஸ்டுடியோ அறையில் இருப்பேன். ஆனால், ஒரு நாள் எதிர்பாராதவிதமாக 5 நிமிடங்கள் தாமதமாக, அதாவது 7.05 மணிக்குச் சென்றேன்.

அப்போது, சிவாஜி அண்ணன் பக்கத்து அறையில் டப்பிங் பணிக்காக வந்திருந்தார். அவர் எப்பொழுதுமே என்னை 'ராஜா' என்று கூப்பிட மாட்டார். மிகவும் அன்போடு 'ராசா' என்றுதான் கூப்பிடுவார்.

அன்று நான் தாமதமாக வந்ததைப் பார்த்த அவர், 'ராசா நீயுமா லேட்டு?' என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு நான் அவரிடம், 'அண்ணே, நான் 7 மணிக்கு வருபவன், 5 நிமிடம் தாமதமாகிவிட்டது.

ஆனால் நீங்கள் 25 வருடங்களுக்கு முன்னதாகவே திரைத்துறைக்கு வந்துவிட்டு, இப்போது என்னை லேட் என்று சொல்கிறீர்களா?' என்று பதிலளித்தேன்," என சிவாஜி கணேசனுடனான தனது பழைய நினைவை மேடையில் பகிர்ந்துகொண்டார்.

சிவாஜியின் பெயரை தர்ஷன் கணேசன் காப்பாற்றுவார்

தொடர்ந்து பேசிய இளையராஜா, இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசனை மனதாரப் பாராட்டினார். "தர்ஷன் கணேசன் இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரைத் திரையுலகில் காப்பாற்றும் அளவிற்கு அவருடைய நடிப்பு அமைந்துள்ளது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்," என்று கூறினார்.

தம்பி கங்கை அமரனை கலாய்த்த 'ராஜா'

மேலும், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள தனது தம்பி கங்கை அமரன் குறித்தும் இளையராஜா கலகலப்பாகப் பேசினார். "என் தம்பி கங்கை அமரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அவர் நிஜ வாழ்க்கையில் என்னிடமே எப்போதும் நடித்துக் கொண்டிருப்பார். அவர் இந்தப் படத்திலும் மிக நன்றாக நடித்திருக்கிறார்," என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நட்சத்திர பட்டாளம்

லெனின் பாண்டியன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்சன் கணேசன் மற்றும் அறிமுக கதை நாயகியாக ஷ்ரிதா ராவ் இவர்களுடன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கங்கை அமரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா மற்றும் பிக்பாஸ் அர்ச்சனை உள்ளிட்ட முன்னணி நட்சத்திரப் பட்டாளம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com