83 வயதிலும் 'கோந்தல்' இசைக்காக நாசிக் கிராமம் சென்ற இசைஞானி இளையராஜா!

கோந்தல் கலையை நேரில் காண 83 வயது இளையராஜா சென்னையிலிருந்து நாசிக் கிராமத்திற்கு பயணம் செய்தார்
Ilaiyaraaja
Published on: 
Summary

இந்தியத் திரையுலகின் உன்னத இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா, தனது 83-வது வயதிலும் இசை மீதும் கதையின் மீதும் கொண்டுள்ள தீராத அர்ப்பணிப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.

கோந்தல் திரைப்படம்

மராத்தி மொழியில் வெளியாகி, தற்போது சர்வதேச ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் சென்றுள்ள “கோந்தல்” திரைப்படத்திற்கு அவர் இசையமைத்த விதம் குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சந்தோஷ் தவக்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பல நூற்றாண்டுகள் பழமையான 'கோந்தல்' சடங்கு மற்றும் அதன் இயல்பான இசை மரபுகளைத் திரைப்படத்தில் அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என இயக்குநர் விரும்பியுள்ளார். இதற்காக, வழக்கமாக ஏசி அறையில் உட்கார்ந்து கம்போசிங் செய்யும் நடைமுறையைத் தாண்டி, இளையராஜா நேரில் சென்று கள ஆய்வு செய்துள்ளார்.

இயக்குநர் சந்தோஷ் தவக்கர் பேட்டி

83 வயதான இசையமைப்பாளர் இளையராஜா, 'கோந்தல்' கலை நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிப்பதற்காக சென்னையிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள எனது சொந்த கிராமத்திற்கு நேரில் பயணம் செய்தார். அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்து, அந்த மரபை நேரில் அனுபவித்தார்.

அவர் தங்கியிருந்த 2 நாட்களும் பாரம்பரிய கீர்த்தனைகள், சடங்கு சார்ந்த இசை மற்றும் 'கோந்தலி' கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை மிக உன்னிப்பாகக் கண்டுகளித்தார். திரைப்பட இயக்குநரின் விளக்கத்தை மட்டுமே நம்பியிருக்காமல், அவரே நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே சென்னை திரும்பி, படத்திற்கான முழு இசையையும் வடிவமைத்தார்.

வேற லெவல் அர்ப்பணிப்பு

ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்கக் கதை மற்றும் சிச்சுவேஷன்களைக் கேட்டுவிட்டு, குளு குளு ஸ்டுடியோ அறையில் உட்கார்ந்து பின்னணி இசை அமைத்துக் கொடுப்பதுதான் இன்றைய சராசரி சினிமா நடைமுறையாக உள்ளது.

ஆனால், இந்த வயதிலும் படத்தின் ஆன்மாவை உணர்வதற்காக, சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, அந்தப் பாரம்பரிய கலையின் உயிரோட்டத்தைத் தனது இசையில் கொண்டு வந்த இளையராஜாவின் இந்த அர்ப்பணிப்பு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

X