இளையராஜாவிற்கு பதில் ஜிவி பிரகாஷ்? ‘பாக்கெட் நாவல்’ படத்தில் மாற்றம்...

இசையமைப்பாளர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை.
GV Prakash - Pocket Novel - Ilaiyaraaja
Published on: 
Summary

தமிழ் திரையுலகில் தனக்கென தனித்துவமான பாணியைக் கொண்டுள்ள இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'பாக்கெட் நாவல்' திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் இளையராஜா விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அவருக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ் குமார் புதிய இசையமைப்பாளராக இணையவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'சூப்பர் டீலக்ஸ்' வெற்றிக் கூட்டணி

'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்' மற்றும் 'மாடர்ன் லவ் சென்னை' ஆகிய மாற்று சினிமா படைப்புகள் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவர் தியாகராஜன் குமாரராஜா.

குறிப்பாக இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.

விறுவிறுப்பாக முடிந்த படப்பிடிப்பு

தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. இத்திரைப்படத்தில் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகப் படக்குழு அண்மையில் ஒரு வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இளையராஜா விலக பின்னணி என்ன?

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் உருவாக்கம் தொடர்பாக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இளையராஜா இந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்ததாகத் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாகத் திரையுலகின் முன்னணி மற்றும் பிஸியான இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமாரை படக்குழு அணுகியுள்ளதாகவும், அவர் புதிய இசையமைப்பாளராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இந்த இசையமைப்பாளர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் இதுவரை வெளியிடவில்லை. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதுகுறித்த தெளிவான விபரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com