

தென்னிந்திய திரையுலகில் ‘பிரேமலு’ திரைப்படம் மூலம் இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகை மமிதா பைஜு மற்றும் நடிகர் சங்கீத் பிரதாப் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஹலோ டியர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகும் இத்திரைப்படம், நவீன மெட்ரோ நகர பின்னணியில் இளைஞர்களின் வாழ்க்கை முறையையும் பார்வையையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் சுரேஷ் கிருஷ்ணா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது கொச்சியில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘பிரேமலு’ படத்தில் ‘ரீனு’வாக மமிதாவும், ‘அமல் டேவிஸ்’ஆக சங்கீத் பிரதாப்பும் இணைந்து செய்த கலக்கலைத் தொடர்ந்து, தற்போது இவர்கள் இருவரும் முதன்மை வேடங்களில் இணைந்து நடிப்பதால், இந்த 'ஹலோ டியர்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கோவிந்த் வசந்த் இசையில், அறிமுக இயக்குநர் டினோய் பாலோஸ் இயக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த ‘டியூட்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விஜய்யின் ‘ஜன நாயகன்’, சூர்யாவின்‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படங்களில் நடித்துள்ளார்.