'ஹைக்கூ' திரைப்படத்தின் டீசரை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண் - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைக்கூ’ திரைப்படம் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
Haiku Movie
Published on
Summary

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், இளம் நடிகர் ஏகன் நடிப்பில் உருவாகியுள்ள புத்துணர்ச்சியான காதல் திரைப்படமான ‘ஹைக்கூ’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி ரொமாண்டிக் ஸ்டார் ஹரிஷ் கல்யாண் இந்த கவித்துவமான டீசரை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பின்னணி இசையில் மிரட்டிய சித்து குமார்

இப்படத்தின் காதல் உணர்வுகளுக்கு இசையமைப்பாளர் சித்து குமாரின் பின்னணி இசை கூடுதல் உயிர் கொடுத்துள்ளது. குறிப்பாக, கிளாசிக்கல் ராகங்களுடன் இணைந்த மென்மையான வயலின் இசையும், நவீன ஃபியூஷன் இசையும் டீசரின் இதமான காட்சியமைப்புகளுடன் அழகாகப் பொருந்துகின்றன.

குறுகிய நேரத்தில், பார்வையாளர்களை ஒரு வண்ணமயமான காதல் உலகிற்குள் அழைத்துச் செல்லும் மயக்கும் இசை அனுபவத்தை இந்த டீசர் வழங்குகிறது.

புத்துணர்ச்சியான திரைக்கதை அணுகுமுறை

ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படங்கள் மத்தியில், மீண்டும் தூய்மையான காதல் கதைகள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனி கவனம் பெற்று வருகின்றன.

அந்த வரிசையில், எழுத்தாளரும் இயக்குநருமான யுவராஜ் சின்னசாமியின் புதுமையான திரை அணுகுமுறை, அனைவருக்கும் பரிச்சயமான காதல் உணர்வுகளை மிகவும் புத்துணர்ச்சியுடன் தருகிறது.

‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் எதார்த்த நடிப்புக்குப் பிறகு, இதில் முற்றிலும் கூலான, நவீன மற்றும் அப்பாவித்தனம் நிறைந்த சிட்டி இளைஞனாக ஏகன் நடித்துள்ளார்.

அவருக்கு இணையாக ஸ்ரீதேவியும், அழுத்தமான தோற்றத்தில் ஃபெமினா ஜார்ஜும் தங்களது அழகான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர்.

இளம் நடிகர்கள், வண்ணமயமான காட்சிகள் மற்றும் மனதை வருடும் இசை ஆகியவற்றுடன், இந்தப் படம் காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பு முடியும் முன்பே நெட்பிளிக்ஸ் ஒப்பந்தம்

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிந்தைய டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ், படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே கைப்பற்றியுள்ளது.

படத்தின் புதுமையான கதை மற்றும் தனித்துவமான திரை அணுகுமுறை ஓடிடி தளத்தின் கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, இந்த டிஜிட்டல் உரிமை கணிசமான பெரும் தொகைக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் குழு

இப்படத்தை டாக்டர் டி. அருளானந்து மற்றும் மாத்யூ அருளானந்து ஆகியோர் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

ஹரி ஹரன் ராம் கூடுதல் திரைக்கதையில் பங்களித்துள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவை மேற்கொள்ள, சக்தி பிரணேஷ் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

பிரேம் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

காதல் உலகத்தின் அழகிய அனுபவத்தை ரசிகர்களுக்குத் தியேட்டரில் வழங்கத் தயாராகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படம் வரும் அக்டோபர் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com