செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களை பேசும் புதிய படத்தில் ஹெச். ராஜா

நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
H Raja
Published on

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

ஹெச் ராஜா உருக்கம்:

இந்நிகழ்வினில் ஹெச் ராஜா பேசும் போது, "எனது உடல்நல குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் என் அருகில் இருந்து அளித்த ஆதரவு மிக முக்கியமானது. எந்த ஒரு விஷயத்தையும் நாம் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தேன்.

இறைவன் அருளால் அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவரின் மத்தியிலும் மீண்டும் வந்து பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்றுள்ளேன். இதற்காக இறைவனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடிகர்களுக்கு எந்தவித மேக்கப்பும் போடப்படவில்லை. முற்றிலும் இயல்பான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி நடித்து கொடுத்துவிட்டு வந்தோம்.

இந்தப் படம் மருத்துவ துறையில் பணியாற்றும் செவிலியர்கள் முன்கள பணியாளர்களின் கஷ்டங்களை பேசுகிறது. இப்படம் கண்டிப்பாக பெரிய வரவேற்பைப் பெறும், அனைவருக்கும் என் நன்றிகள்," என்று தெரிவித்தார்.

சிறப்பு தோற்றம்:

இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல், தவறான மருத்துவ தகவல்கள், குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பொறுப்பான வாழ்க்கைத் தேர்வுகள் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூகத்தின் கூட்டு பொறுப்பின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு (CBFC) சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம், 2026 செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com