

‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டி வழங்கும் பிரம்மாண்ட பான்-இந்தியா திரைப்படமான ‘மோட்டார் சைக்கிள் டைரிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் போஸ்டரைத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, 'மற்றொரு அற்புதமான திரைக்கதை தயாராகிக்கொண்டிருக்கிறது. ஒரு திறமையான அறிமுக இயக்குநர் வருகிறார். இந்திய சினிமாவே தயாராக இருங்கள் ” ("Another terrific script Onway. One terrific debut director is Onway. Get ready Indian cinema ") எனப் பதிவிட்டுள்ளார்.
வெளியாகியுள்ள போஸ்டரில், விரித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய டைரியின் பக்கங்களைக் கிழித்துக்கொண்டு, பசுமையான இயற்கை எழில் கொஞ்சும் பாதையில் ஒருவர் பைக்கில் பயணிப்பது போன்ற காட்சி மிகவும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பயணத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
ரிஷப் ஷெட்டி வழங்கும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ரிஷப் ஷெட்டி ஃபிலிம்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் பிரகதி ரிஷப் ஷெட்டி இணைந்து தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குநர் சிவா சிரந்தனா எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும், நவீன் நூலி படத்தொகுப்பையும், புவன் ரெட்டி ஒளிப்பதிவையும், தரணி கங்கேபுத்ரா கலை இயக்கத்தையும் கவனிக்க, ரகு நிடுவல்லி வசனங்களையும், பிரகதி ரிஷப் ஷெட்டி ஆடை வடிவமைப்பையும் மேற்கொள்கின்றனர்.
‘மோட்டார் சைக்கிள் டைரிஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
ரிஷப் ஷெட்டி, நாக வம்சி மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோரின் இந்தப் புதிய கூட்டணி இந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.