ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம் ‘நிஞ்சா’ - இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

‘நிஞ்சா’ திரைப்படம், அடுத்த ஆண்டு (2027) திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
G V PrakashKumar - Prarthana Nathan
Published on

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்சா’-வின் (NINJA) அதிகாரப்பூர்வ தொடக்க விழா மற்றும் பிரம்மாண்ட பூஜை இன்று காலை தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

புதிய முயற்சி

தமிழ் திரையுல வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு புதிய திரைப்படத்தின் தொடக்கப் பூஜை மற்றும் விளம்பர நிகழ்ச்சி ஒரு சினிமா தியேட்டருக்குள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பொதுவாக படப்பிடிப்பு தளங்கள், ஸ்டூடியோக்கள் அல்லது கோயில்களில் மட்டுமே நடத்தப்படும் பூஜை விழா, இந்த முறை தஞ்சை மக்களின் நேரடிப் பங்கேற்புடன் ஸ்ரீபதி தியேட்டர் இருக்கைகளில் படக்குழுவினர் அமர்ந்திருக்க, ரசிகர்களின் ஆரவாரத்துடன் வித்தியாசமான முறையில் கொண்டாடப்பட்டது.

படக்குழு

இயக்குநர் முருகு இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'நிஞ்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷிற்கு ஜோடியாக 'பார்க்கிங்' மற்றும் 'டிடிடி' பட புகழ் பிராத்தனா நாதன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை சினிஷ் மற்றும் Learn & Teach Production தயாரிக்கவுள்ளது.

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான குரலாலும், ஆன்மாவைத் தொடும் மெல்லிசைகளாலும் முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஷான் ரோல்டன்.

பாரம்பரிய கர்நாடக இசைப் பின்னணியைக் கொண்ட இவர், தற்போது, ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் 'நிஞ்ஜா' திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக உள்ளார்.

படப்பிடிப்பு நிலவரம்

இன்று காலை தஞ்சை ஸ்ரீபதி தியேட்டரில் நடைபெற்ற விசேஷ பூஜை விழாவில் ஜி.வி.பிரகாஷ் குமார், பிராத்தனா நாதன், ஷான் ரோல்டன், இயக்குநர் முருகு மற்றும் தயாரிப்பாளர் சினிஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் தியேட்டர் இருக்கைகளில் அமர்ந்து விழாவை சிறப்பித்தனர்.

இந்த மங்களகரமான நிகழ்வைத் தொடர்ந்து, படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான முறையில் தொடங்கியுள்ள இந்த ‘நிஞ்சா’ திரைப்படம், அடுத்த ஆண்டு (2027) திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கதையின் பின்னணி

தஞ்சாவூர் ஸ்ரீபதி தியேட்டரில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜை விழாவைத் தொடர்ந்து, ‘நிஞ்சா’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில், கதையின் முக்கிய அங்கமான ஒரு நாய்க்குட்டி, சிவப்பு நிற லெதர் ஜாக்கெட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து செங்கற்களுக்கு நடுவே செம மாஸாகவும் கெத்தாகவும் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

சுற்றிலும் தேங்காய், மாலைகள் மற்றும் பூக்கள் தூவப்பட்டு ஒரு பூஜைக்கான சூழலில் இந்த நாய் குட்டியின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com