

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால திரைப்பயணத்தைக் கொண்டாடும் 'ஒன்றா ரெண்டா' இசை கச்சேரி மலேசியாவின் கோலாலம்பூரில் அக்டோபர் 10-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
சென்னையில் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, சிறப்பு இசை நிகழ்ச்சி தற்போது மலேசியத் தமிழ் ரசிகர்களுக்காக கோலாலம்பூரில் அரங்கேற உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களில் இடம்பெற்ற எவர்கிரீன் பாடல்களைக் கொண்டாடும் விதமாக இந்தத் தொடர் கச்சேரிகள் 'ஒன்றா ரெண்டா' என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த பிரம்மாண்ட கச்சேரியில் ரசிகர்களுக்குப் பிடித்த பல முன்னணிப் பாடகர்கள் மேடையேறுகின்றனர். கார்த்திக், ஸ்ருதி ஹாசன், கிரிஷ், பிளேஸ், சைந்தவி, பால் டப்பா, சத்ய பிரகாஷ் மற்றும் ஹரிப்ரியா.
இசைக்கலைஞர்களாக கேபா ஜெரெமையா, லலித் தல்லூரி, மனோஜ் குமார், கீத் பீட்டர்ஸ் மற்றும் புவனேஷ் நாராயணன் ஆகியோர் இணைந்து நேரலையில் இசை விருந்து படைக்கவுள்ளனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான 'மின்னலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான கௌதம் வாசுதேவ் மேனன், தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
தொடர்ந்து 'வாரணம் ஆயிரம்' (2008), 'விண்ணைத்தாண்டி வருவாயா' (2009), மற்றும் 'நீதானே என் பொன்வசந்தம்' (2012) போன்ற காதல் திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் 'ரொமாண்டிக்' இயக்குநராக முத்திரை பதித்தார்.
காதலில் மட்டுமின்றி 'காக்க காக்க' (2003), 'வேட்டையாடு விளையாடு' (2006) மற்றும் 'என்னை அறிந்தால்' (2015) ஆகிய பிளாக்பஸ்டர் போலீஸ் கதைகள் மூலம் ஆக்ஷன் ஜானரிலும் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கினார்.
சமீபத்திய இயக்கமாக மம்மூட்டி நடிப்பில் 2025-இல் வெளியான 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரைப்பட இயக்கம் மட்டுமின்றி, 2020-ஆம் ஆண்டு வெளியான 'டிரான்ஸ்' மற்றும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஆகிய படங்கள் மூலம் நடிகராகவும் களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
சமீபத்தில், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் (தளபதி விஜய்) அவர்களின் திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்திலும் கௌதம் மேனன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.