தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் முன்னாள் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரனை நேரில் சந்தித்து தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆலோசனை!

இது போன்ற ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், என்னை போன்ற புதிய தலைமுறையினருக்கு வழிகாட்டுதல்.
SA Chandrasekaran
Published on: 
Summary

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், முன்னாள் தலைவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களை, சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, சங்கத்தின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்கால வளர்ச்சி மற்றும் பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர்.

13 ஆண்டுகளுக்குப் பின் தொடரும் மாத இதழ்

இந்த ஆலோசனையின் போது, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாகப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகரன் மிக ஆர்வமாகக் கேட்டறிந்தார். குறிப்பாக, தான் தலைவராக இருந்த காலகட்டத்தில் சங்கத்தின் அதிகாரப்பூர்வ மாத இதழ் சிறப்பாக வெளிவந்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

அதன் பின்னர், சுமார் 13 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது அந்த மாத இதழ் மீண்டும் தொடர்வது குறித்து அவர் தனது ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தெரிவித்தார். மேலும், சங்கத்தின் வளர்ச்சிக்கும் உறுப்பினர்களின் நலனுக்கும் தற்போதைய நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் இந்தச் சந்திப்பு ஒரு சிறந்த அனுபவமாக அமைந்ததாக அவர் பாராட்டினார்.

ஜி.கே.எம். தமிழ்க்குமரன் நெகிழ்ச்சி

இந்தச் சந்திப்பு குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்க்குமரன் கூறுகையில், “திரைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் தலைவர்களின் இது போன்ற ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள், என்னை போன்ற புதிய தலைமுறையினருக்கு நிர்வாகத்தினைத் தொய்வின்றி நடத்திடப் பெரும் துணையாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, திரைப்படத் துறைக்கு இன்னும் பல நன்மையான மற்றும் புதிய திட்டங்களைக் கொண்டு வருவதற்கு இது போன்ற சந்திப்புகள் மிகப்பெரிய ஊக்குவிப்பாக அமையும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திரைப்படத் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் நோக்கில், சங்கத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்கள் இணைந்து நடத்திய இந்தச் சந்திப்பு கோலிவுட் வட்டாரத்தில் ஆரோக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com