

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா மற்றும் நடிகர் கவின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘ஹாய்’. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள படத்தில் மறைந்த திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், மூத்த நடிகர்கள் பிரபு மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விடிவி கணேஷ், சத்யன், அம்ருதா சீனிவாசன், ஆதித்யா கதிர், குரேஷி, ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், காவியா அறிவுமணி மற்றும் மிர்ச்சி கெமி ஆகியோரும் நடித்துள்ளனர். ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் விக்னேஷ் சிவனின் ‘ரவுடி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை கமலா திரையரங்கில் 'ஹாய்' திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், நடிகை நயன்தாரா திடீரென அங்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். திரையரங்கிற்குள் நயன்தாராவைக் கண்டதும் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திரையரங்கில் ரசிகர்களிடையே நயன்தாரா உரையாடிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவரை மேடைக்கு வருமாறு அழைத்தார். மேடைக்குச் சென்ற அந்த ரசிகை, நயன்தாராவை அருகில் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி அழத் தொடங்கினார்.
உடனடியாக அந்த பெண் ரசிகையை நயன்தாரா அன்போடு கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அங்கிருந்த ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.