மீண்டும் வந்தது FDFS: தமிழ்நாட்டில் காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி- ரசிகர்கள் கொண்டாட்டம்!

தமிழ்நாட்டில் மட்டும் காலை 9 மணிக்குப் பிறகே படங்கள் வெளியாகும் சூழல் நிலவி வந்தது.
Chief Minister Vijay
Published on: 
Summary

அரசின் இந்த புதிய உத்தரவின் படி, பண்டிகைக் கால வார இறுதிகளில் புதிய திரைப்படங்கள் கூடுதல் காட்சியுடன் சேர்த்து உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஒரே நேரத்தில் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பண்டிகைக் கால வார இறுதிகளில் திரைப்படங்களின் காட்சிகளை காலை 6 மணி முதல் தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை திரையிடவும், மொத்தம் ஆறு காட்சிகள் வரை நடத்தவும் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கையானது நீண்ட காலமாக தமிழ்த் திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மிகமுக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்கு ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலை 5 மணி மற்றும் 6 மணி சிறப்பு காட்சிகள் அதிரடியாக நிறுத்தப்பட்டன. இதனால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் படங்கள் காலை 6 மணிக்கே திரையிடப்பட்ட போதிலும், தமிழ்நாட்டில் மட்டும் காலை 9 மணிக்குப் பிறகே படங்கள் வெளியாகும் சூழல் நிலவி வந்தது.

இதன் காரணமாக அண்டை மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படத்தை முதலில் பார்க்கும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிட, தமிழ்நாட்டில் படம் வெளியாகும் முன்பே கதையும் முக்கிய திருப்பங்களும் கசிந்துவிடும் அவலம் நீடித்தது. இதனால் உலகளாவிய அளவில் தமிழ் திரைப்படங்களுக்கு சமமான வெளியீட்டு வாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தது.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் , திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து முக்கிய அமைப்புகளும் இணைந்து தமிழ்நாடு அரசுடன் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தின. இதில் பண்டிகைக் கால வார இறுதிகளில் காலை 6 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கூடுதல் காட்சிகளைத் திரையிட அனுமதிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்த தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், உடனடியாக இதனை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு சென்று தகுந்த அனுமதியைப் பெற்றுத் தந்துள்ளார். அரசின் இந்த புதிய உத்தரவின் படி, பண்டிகைக் கால வார இறுதிகளில் புதிய திரைப்படங்கள் கூடுதல் காட்சியுடன் சேர்த்து உலகெங்கும் உள்ள ரசிகர்களை ஒரே நேரத்தில் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே 2015 முதல் 2022 வரை தயாரிக்கப்பட்ட 224 திரைப்படங்களுக்கு நிலுவையில் இருந்த மானியத் தொகையை வழங்கி தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்திய அரசு, தற்போது இந்தச் சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதியையும் அளித்துள்ளமை தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்த் திரையுலகின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர் ஆகியோருக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் உரித்தாக்கியுள்ளது.

X