மனைவி நஸ்ரியாவுடன் ஜோடியாக நடிப்பது எப்போது?- பகத்பாசில் பேட்டி

என் சிறுவயதில் நான் பார்த்த அஞ்சலி, மைடியர் குட்டி சாத்தான் போன்ற படங்களின் உணர்வை இது எனக்கு நினைவூட்டியது.
பகத்பாசில்
பகத்பாசில்
Published on: 
Summary

சென்னையில் நடந்த முன்னோட்ட விழாவில் ராஜமவுலி, சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழில் கார்த்தியுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும், உதிரி பூக்கள் ரீமேக்கில் நடிக்க விருப்பமுள்ளதாகவும் பகத்பாசில் கூறினார். மனைவி நஸ்ரியாவுடன் ஜோடியாக நடிக்க தகுந்த சம்பளம் கிடைத்தால் தயாராக இருப்பதாகவும், நஸ்ரியா தலையிட மாட்டார் என்றும் தெரிவித்தார்.

ஷஷாங்க்யெலெட்டி எழுதி இயக்கி உள்ள படம் ‘டோன்ட் டிரபிள் தி டிரபிள்’. படத்தில் பகத்பாசில், குழந்தை நட்சத்திரம் சாரா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்திய திரை உலகில் பிரபல இயக்குனரான ராஜமவுலி வழங்கும் இந்த படத்தை அவரது மகன் கார்த்திகேயா தயாரித்துள்ளார். படத்திற்கு தமிழில் கமல்ஹாசனும், தெலுங்கில் பாலகிருஷ்ணாவும், மலையாளத்தில் மோகன்லாலும் குரல் கொடுத்துள்ளனர்.

வருகிற 2-ந்தேதி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.ராஜமவுலி, சூர்யா, ஐசரி கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர். படம் குறித்து நடிகர் பகத்பாசில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் இதுவரை கேட்காத ஒரு புதுமையான கதையாக இந்த படத்தின் கதை இருந்தது. என் சிறுவயதில் நான் பார்த்த அஞ்சலி, மைடியர் குட்டி சாத்தான் போன்ற படங்களின் உணர்வை இது எனக்கு நினைவூட்டியது. ஆவேசம் படத்தை போன்ற மாஸ் கேரக்டர்களை விட மனித உணர்வுகளுக்கு நெருக்கமான இது போன்ற எளிய கதாபாத்திரங்களில் நடிப்பதே சவாலானது.

ஐதராபாத்தில் நள்ளிரவு மற்றும் கூட்ட நெரிசல்களில் வெற்றிகரமாக படப்பிடிப்பு நடத்தினோம். படத்தில் குழந்தை நட்சத்திரம் சாரா மற்றும் ஒருநாய் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழில் அடுத்ததாக பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழில் உதிரி பூக்கள் படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்.

நானும் எனது மனைவி நஸ்ரியாவும் இணைந்து நடிப்பதற்கு தகுந்த சம்பளம் கொடுத்தால் நடிக்க தயார். பல படங்களில் எனக்கு ஜோடி வாய்ப்புகள் குறைவு என்பது உண்மைதான். இந்த விஷயத்தில் என் மனைவி நஸ்ரியா தலையிட மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜோதிகாவின் நீண்ட நாள் ஆசை

விழாவில் நடிகர் சூர்யா பேசும் போது, “திருமணமாகி 20 ஆண்டுகள் ஆனதையொட்டி நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்வது போன்ற நிகழ்ச்சியை நடத்தியது ஜோதிகாவின் நீண்டநாள் விருப்பமாக இருந்தது. இது போன்ற ஒன்றை மீண்டும் உருவாக்க முடியுமா? என தெரியவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள நினைத்தோம். டோண்ட் டிரபிள் தி டிரபிள் படத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com