

யூடியூப் தளத்தின் பிரபல 'டெம்பிள் மங்கீஸ்' குழுவின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற 'மொத ராத்திரி' திரைப்படம் மூலம் கதநாயகனாக உருவெடுத்துள்ளவர் நடிகர் ரிஷிகாந்த். திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகத் தனக்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டதாகக் கூறியுள்ள அவர், சினிமாவில் நுழைவதை விட அதில் நீண்ட காலம் நிலைத்து நிற்பதே மிகப்பெரிய சவால் என்று தனது திரைப் பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சிறு வயதில் திரையில் பார்க்கும் கார்ட்டூன்களை நிஜம் என்று நம்பியதில் தொடங்கி, சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் சென்னையில் தான் நடக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டது வரையிலான தனது அனுபவங்களை ரிஷிகாந்த் பகிர்ந்துள்ளார். தான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவராக இருந்திருந்தால் அல்லது திரையுலகில் அதிக தொடர்புகள் இருந்திருந்தால் இன்னும் விரைவாக வளர்ந்திருக்கக்கூடும் எனக் குறிப்பிட்ட அவர், சென்னைக்கு வெளியே இருந்து வந்ததால் சரியான நிலையை அடைய 15 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது என்று கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த காத்திருப்பு காலம் வீணானது அல்ல என்றும், ஒவ்வொரு முறையும் வாய்ப்புகள் கிடைக்காத போது தன்னைத்தானே பட்டை தீட்டிக் கொள்ளவும், அடுத்த கட்டத்திற்குத் தயாராகவுமே அந்த நேரத்தைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் நீடித்திருப்பது குறித்த தனது கருத்தைப் பதிவு செய்த ரிஷிகாந்த், "சினிமாவை எனது தொழில்பாதையாகத் தேர்ந்தெடுப்பது எனது சொந்த விருப்பம். ஆனால் அந்த முடிவு எனது குடும்பத்தையோ அல்லது என்னைச் சார்ந்தவர்களையோ எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது. எனவே, இந்தத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்கும் போது, நாம் வயதாகும் வரையிலும் இதில் நிலைத்து நிற்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த 'மொத ராத்திரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்திலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
கதாநாயகனாக உருவெடுப்பதற்கு முன்பாக 'ஹீரோ' (2018), 'இந்தியன் 2' (2024), 'கூலி' (2025) போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும், 'மத்தகம்' வலைத்தொடரிலும் முக்கிய கதாபாத்திரங்களில் ரிஷிகேந்த் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள 'டாரதி' திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் சனந்த் ஆகியோருடன் இணைந்து ரிஷிகாந்த் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டைப் பெற்ற இத்திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.