

இயக்குநர் மலர்விழி நடேசன் எழுதி, இயக்கியுள்ள 'சிக்னல் அட் 11:30' (Signal At 11:30) திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான "போக போக போகாதே" முழு வீடியோ பாடலாக வெளியாகியுள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடல் வெளியீடு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து, தயாரித்து, அவரே தனது உருக்கமான குரலில் இப்பாடலைப் பாடியுள்ளார். பாடலாசிரியர் மோகன்ராஜன் காதலின் வலியையும் பிரிவின் ஏக்கத்தையும் உணர்வுபூர்வமான வரிகளாக வடித்துள்ளார்.
"போக போக போகாதே, என்னை விட்டுப் போகாதே எந்தன் உயிரே... தனிமை தந்தாயே நீதானே" எனத் தொடங்கும் இப்பாடல் காதலர்களின் பிரிவுத் துயரை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. இப்பாடலுக்கு நடன இயக்குநர் ஷெரிஃப் நடனம் அமைத்துள்ள நிலையில், ரங்கப்பிரியாவின் தனி வயலின், விஜய் மற்றும் கணேசனின் கிட்டார், சாரு ஹரிஹரனின் கஜோன் மற்றும் கஞ்சிரா ஆகிய இசைக்கருவிகளுடன் மரியா ரோ வின்சென்ட் தலைமையிலான எல்ஃப் கோயர் குழுவினரின் பின்னணி இசையும் பாடலுக்குப் பெரும் பலம் சேர்த்துள்ளன.
பிரபல இசை நிறுவனமான லஹரி மியூசிக் யூடியூப் தளத்தில் இப்பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
அலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்ரமணி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இதில் கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, அவருக்கு ஜோடியாக பவ்யா திரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஜெயப்பிரகாஷ், முனீஸ்காந்த், ஆர்யன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும், முனி கிருஷ்ணன் கலை இயக்கத்தையும், ஸ்டன்னர் சாம் சண்டைப் பயிற்சியையும் கவனித்துள்ளனர். டி. உதயகுமார் ஒலி வடிவமைப்பு செய்ய, இன்பினிட்டி மீடியா டி.ஐ பணிகளையும், ஹோக்கஸ் போக்கஸ் வி.எஃப்.எக்ஸ் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள 'சிக்னல் அட் 11:30' திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.