கனவும் நிஜமும் கலந்த மாய உலகம் - மிரட்டும் "ட்ரோன்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

“ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.
Drones FirstLook
Published on

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முற்றிலும் அரிதான ஒரு முயற்சியாக உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி திரைப்படம் “ட்ரோன்ஸ்”.

வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர், சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த இந்தத் திரைப்படத்தின் முழு உரிமையையும் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் செந்தில் ஆகியோர் வாங்கியுள்ளனர்.

திரைப்படத்தை தன் குடும்பத்துடன் பார்த்து மிகவும் ரசித்த தயாரிப்பாளர் செந்தில், கதையின் மீதான முழு நம்பிக்கையால் உடனடியாக இதன் உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் இப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. முன்னதாக இப்படத்தின் மூன்று மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

வினோதமான கதைக்களம்

கனவுகளில் மட்டுமே நிகழக்கூடிய விசித்திரமான சம்பவங்கள் நிஜ உலகில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு மேட் சயின்டிஸ்ட் , டிடெக்டிவ், ஏஞ்சல், சூனியக்காரி மற்றும் பல புதிரான சம்பவங்கள் நிறைந்த கற்பனை உலகில் பயணிக்கும் வகையில், தமிழ் சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி பாணியில் இப்படம் மிரட்டலாக உருவாகியுள்ளது.

3 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

தற்போது வெளியாகியுள்ள மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் படத்தின் விநோதமான உலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முதல் போஸ்டர் (மாயாஜால உலகம்):

அடர்ந்த காடு, முழுநிலவு, மர்மமான கோட்டை, வௌவால்கள் மற்றும் தேவதை போன்ற உருவங்களுக்கு நடுவே கதாநாயகி காட்சியளிப்பதன் மூலம் ஒரு மாயாஜால ஃபேண்டஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது போஸ்டர் (சயின்ஸ் ஃபிக்ஷன்):

படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் ஒன்றாக இடம்பெற, அருகில் ட்ரோன், மர்மமான வயதான பெண், வித்தியாசமான சாதனங்கள் என சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஃபேண்டஸி கலந்த உலகை வெளிப்படுத்துகிறது.

மூன்றாவது போஸ்டர் (ஹாரர் & திகில்):

எண்ணற்ற பொம்மைகள் சூழ்ந்த இருண்ட அறையில் ஆக்ரோஷமான தோற்றத்தில் ஒரு சூனியக்காரி இடம்பெற்றிருப்பது படத்தின் ஹாரர் மற்றும் திகில் அம்சங்களை மிரட்டலாக எடுத்துக்காட்டுகிறது.

மூன்று போஸ்டர்களிலும் மூன்று விதமான மனநிலைகளையும், கதையின் பல அடுக்குகளையும் காட்சிப்படுத்தி படக்குழு ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் முன்னணி நடிகைகளான சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோருடன் தேவதர்ஷினி, பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம், விஜய் டிவி புகழ் குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் மற்றும் இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகும் ஆர்ஜே தீபக் உள்ளிட்டோர் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக்குழு

தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய முயற்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரி S.R இசையமைக்கிறார்.

மேலும் சதீஸ் சூர்யா படத்தொகுப்பு பணிகளையும், R. கிஷோர் கலை இயக்கத்தையும், ஹர்ஷிகா ராமேஷ் ஆடை வடிவமைப்பையும் கையாண்டு இப்படத்தின் முக்கிய தூண்களாகப் பணியாற்றியுள்ளனர்.

ரிலீஸ் அப்டேட்

இறுதிக்கட்ட பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், “ட்ரோன்ஸ்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன், ஹாரர் என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி வரும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய மற்றும் வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக விரைவில் இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com