

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ஒரு படத்திற்காக இந்தியா முழுவதும் 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்த அனுபவத்தை பகிர்ந்து, சேலம் அருகே உள்ள இயற்கை அழகை பாராட்டினார். கதாநாயகி தேவகியின் புன்னகையும் நடிப்பும் தமிழ் சினிமாவுக்கு புதிய வரவாக இருக்கும் எனக் கூறினார்.
மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன். மிதுன் மகேஷ்வரன் கதாநாயகனாக நடித்துள்ளார். தேவகி கிருஷ்ணன் அறிமுக நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அப்பு குட்டி, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘அரிக்கொம்பன்’ திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மனிதர்களின் தரம், தகுதி ஆகியவற்றைப் பார்த்து பழகாமல், மனிதர்களை மனிதர்களாக நேசிக்கும் பண்பு ஒரு சிலருக்கே இருக்கும். அந்தப் பண்பை நான் கரு.நாகராஜனிடம் கண்டிருக்கிறேன்.
சேலம் அருகே இவ்வளவு பிரமாண்டமான இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு திரைப்படத்திற்கான காடுகளைத் தேடி இந்தியா முழுவதும் சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்த அனுபவம் எனக்கு இருக்கிறது. தென்னிந்தியாவின் பல்வேறு வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். ஆனால், சேலம் அருகே இத்தகைய அழகான இடத்தைப் பார்ப்பது வியப்பாக இருக்கிறது. இவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் அனிலுக்கு எனது வாழ்த்துகள். கதாநாயகி தேவிகா, லட்சுமி மேனனுடன் ஒப்பிட்டுப் பாராட்ட விரும்புகிறேன். அவருடைய அழகான புன்னகையும் இயல்பான நடிப்பும் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். கதாநாயகனைப் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் கார்த்தியின் நடிப்பு எனக்கு நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.