

அண்மையில் ஷாருக்கான், ஆனந்த் அம்பானி, ஜக்கி வாசுதேவ் ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. அதில், ஷாருக்கானை பார்த்து ஆனந்த் அம்பானி அமைதியாக இருக்கும்படி கூறுவதுபோல சைகை காட்டினார்.
இதுதொடர்பாக சுவிக்யா ஷர்மா என்ற சமூக வலைதளப் பிரபலம் ஒரு வீடியோவைப் பதிவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அந்த இன்ஃப்ளூயன்சருக்கு ஷாருக்கான் தரப்பில் சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அந்த நோட்டீஸில் 48 மணி நேரத்திற்குள் வீடியோவை நீக்க உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தங்கள் தரப்பில் இருந்து எந்த நோட்டீஸும் அனுப்பப்படவில்லை என ஷாருக்கான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள ஷாருக்கான் தரப்பு, ‘23 நவம்பர் 2026 தேதியிட்ட ஒரு 'சட்டப்பூர்வ அறிவிப்பு' சமூக ஊடகங்களிலும், சில செய்தி அறிக்கைகளிலும் பரப்பப்பட்டு வருகிறது. ஷாருக் கானின் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் என்ற முறையில், இந்த அறிவிப்பு அவராலோ அல்லது அவர் சார்பாகவோ வழங்கப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.
எங்களை உள்ளடக்கிய எந்தவொரு வழக்கறிஞருக்கோ அல்லது சட்ட நிறுவனத்திற்கோ நோட்டீஸ் வழங்குமாறு கான் அறிவுறுத்தவில்லை. ஊடக நிறுவனங்களும், சமூக ஊடகப் பக்கங்களும் செய்தி வெளியிடுவதற்கு முன்பு இதைச் சரிபார்க்கவும்.
மேலும் இந்த அறிவிப்பு கானுக்கு உரியது என்று கூறும் உள்ளடக்கத்தைத் திருத்தவோ அல்லது அகற்றவோ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.