

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் தனுஷின் 56-வது திரைப்படத்தின் (D56) படப்பிடிப்புப் பணிகள், சிவகங்கை மாவட்டம் மாரநாடு கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற பிரம்மாண்ட சிறப்புப் பூஜையுடன் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.
'லப்பர் பந்து' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார்.
சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் (நாக வம்சி), பிரைமார்க் புரொடக்ஷன்ஸ் (ஹரிதா லிங்கசாமி) மற்றும் ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (சாய் சௌஜன்யா) ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன.
படப்பூஜையை முன்னிட்டு அப்பகுதி மக்களுக்குப் பிரம்மாண்ட கிடா விருந்து வழங்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் அந்த இடமே மாநாடு போலக் காட்சியளித்தது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில் படக்குழுவினர் தங்களது எதார்த்தமான உரையாடல்களை பகிர்ந்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷுடன் இணைவது குறித்து நடிகர் வடிவேலு பேசியபோது, "சினிமாவில் சில விஷயங்கள் சரியான நேரத்தில் அமைய வேண்டும்.
இப்போது இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. மாரநாடு கருப்பணசாமி கோயில் மிகவும் விசேஷமானது. இவ்வளவு பெரிய கூட்டத்தையும், மக்களின் அன்பையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
இந்தப் படம் சாதாரணமான படம் இல்லை; எந்த அரசியல் தாக்கமும் இல்லாத, தனித்துவமான ஒரு படம். கதையைக் கேட்டபோது மிகவும் பெருமையாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
இது மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய படம். இன்னும் சில நாட்களில் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்," என்றார்.
விழாவில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "வழக்கமாகப் படங்களின் பூஜையைச் சென்னையில்தான் நடத்துவார்கள். ஆனால், மாரநாடு கருப்பசாமியின் அருளோடும், உங்கள் அன்புக்கு முன்னாலும் இப்பூஜை நடைபெறுவது மகிழ்ச்சி.
தமிழரசன் பச்சமுத்து ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தின் மூலம் சிறந்த உணர்வை உருவாக்கக்கூடிய ஒரு இயக்குநராக அவர் இருக்கிறார். நம்ம மண்ணின் கதையை மிகவும் அழகாக உருவாக்கியிருக்கிறார்," என்று பாராட்டினார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் பேசிய நடிகர் தனுஷ், "இந்த பூஜை, இன்று பின்னால் இருக்கும் சாமியையும், முன்னால் இருக்கும் உங்களையும் நம்பித்தான் நடைபெறுகிறது.
இன்று நான் அதிகம் பேச விரும்பவில்லை. அனைவரும் இங்கு நடைபெறும் கடா விருந்தில் வயிறார சாப்பிட்டு, பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும். விரைவில் 'ஓம்' படத்தின் ஆடியோ லாஞ்சில் உங்களை மீண்டும் சந்திப்பேன்," என்று பேசினார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன் மற்றும் உரியடி புகழ் விஜயகுமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தனுஷின் நடிப்பு, தமிழரசன் பச்சமுத்துவின் தனித்துவமான இயக்கம், சாய் அபயங்கரின் இசை எனப் பல சிறப்பம்சங்களுடன் உருவாகும் 'D56' படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.