

நிதேஷ் திவாரி இயக்கத்தில், பெரும் பொருட்செலவில் நடிகர் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி நவ.5ம் தேதி வெளியான படம் ராமாயணா.
வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் இந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகிறது.
பெரிதும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெறாமல், திரையரங்குகளில் வெற்றிக்கரமாக படம் ஓடிவருகிறது.
பலரும் இப்படத்தில் சீதை கதாபாத்திரம் தைரியமாக காட்டுப்பட்டுள்ள விதத்தை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ராவணனான யஷ்ஷின் நடிப்பையும் புகழ்ந்து வருகின்றனர்.
அதேவேளையில், இந்த இரு கதாபாத்திரத்தின் சித்தரிப்பும் சிலரிடையே விமர்சனங்களை பெற்றுவருகிறது.
நவீன காலத்திற்கு ஏற்றவாறு இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் மாற்றியமைக்கக் கூடாது என்றும், அவர்களின் அடிப்படை குணாதிசயம் என்னவோ அதையே காட்சிப்படுத்தியிருக்க வேண்டும் என ராமாயணா, மகாபாரதம் தொலைக்காட்சி தொடர்களின் நடிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
நேற்று நடிகர் முகேஷ் கண்ணா விமர்சித்திருந்த நிலையில், இன்று நடிகர் நிதிஷ் பரத்வாஜ் விமர்சித்துள்ளார்.
முன்னதாக இப்படத்தின் டிரெய்லரை பாராட்டி, ஆஸ்கர் விருதை வெல்லும் என்று தெரிவித்திருந்த கருத்தையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரியின் ராமாயணா, வால்மீகி படைப்பின் அடிப்படை விழுமியங்களில் இருந்து விலகி நிற்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது;
‘ராமாயணா’ இந்தியாவின் ரத்தத்தில் ஊறிப்போயுள்ளது. ராமாயணம் என்பது வெறும் கதையல்ல; அது சனாதன பாரதத்தின் நாகரிக மற்றும் ஆன்மீக உணர்வில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இந்த மகா காவியத்தின் நாயகன், நாயகி மற்றும் எதிர்நாயகன் ஆகியோர், அதன் விழுமியங்களுடனும் செய்தியுடனும் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளனர். இவர்களது குணநலன்களையும் முக்கியத்துவத்தையும் மேலோட்டமாகவோ அல்லது தன்னிச்சையாகவோ மறுவரையறை செய்ய முடியாது.
தர்மத்தையும், பாரம்பரியத்தையும் நிலைநாட்டவும், அறநெறிகளை உறுதிப்படுத்தவும் மகாவிஷ்ணு ராம அவதாரத்தை எடுத்தார்.
ராவணனை மிகவும் தாராள மனப்பான்மை கொண்ட, சமூக நீதி மற்றும் நேர்மை மிக்க ஒரு நபராகச் சித்தரிப்பதன் மூலம், இந்தத் திரைப்படம் ராமாயணத்தின் அறக் கட்டமைப்பையே மாற்றி அமைப்பதாகவும், இந்த அவதாரத்தின் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாகவும் நான் கருதுகிறேன்.
இந்தத் திரைப்படத்தைப் பற்றி நான் முதலில் தெரிவித்த பாராட்டுரையைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. இது குறித்து நான் முன்னதாகப் பதிவிட்ட கருத்தை நீக்கிக்கொள்கிறேன். இந்தப் படத்தைப் பற்றிச் சொல்வதற்கு நல்ல விஷயம் என்று எதுவுமே இல்லை.
இந்த மகாகாவ்யத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், தத்துவ ஆழம் மற்றும் ஆன்மீக சாராம்சத்திற்கு, விஎஃப்எக்ஸ்-இன் பிரம்மாண்டம் ஒருபோதும் மாற்றாக அமையாது.
நமது கலாச்சார மரபு பொறுப்புணர்வுடன் பிரதிபலிக்கப்பட வேண்டும். எனது பார்வையில், இந்தியாவின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் அதன் அடிப்படை ஆன்மீக விழுமியங்களை தவறாகச் சித்தரிக்கும் இந்தத் திரைப்படம், இந்தியத் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதியற்றது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ராவணன் குணாதிசயம் குறித்து சாய்பல்லவி கூறிய கருத்துகளும் சிலரிடையே கண்டனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.